Published : 08 Oct 2021 01:28 PM
Last Updated : 08 Oct 2021 01:28 PM
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று காலை 11 மணிக்கு நேரில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி போலீஸார் சம்மன் அனுப்பியும் மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் கலவரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று முதல் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்தக் கலவரம் தொடர்பாக எத்தனை பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது, யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர், இறந்தவர்கள் விவரம் ஆகியவற்றை அறிக்கையாக இன்று தாக்கல் செய்ய உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அவசர அவசரமாக மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு நேற்று போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரக் கோரினர். ஆனால், இதுவரை அவர் விசாரணைக்குச் செல்லவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போலீஸ் டிஐஜி உபேந்திரா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு முன் இதுவரை ஆஷிஸ் மிஸ்ரா ஆஜராகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடைடேய ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்டஅறிக்கையில், “மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ராவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து தனது இருப்பிடங்களை மாற்றி வருகிறார். அவரைப் பிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நேபாளத்துக்கு மிஸ்ரா தப்பித்துச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், அதுகுறித்து உ.பி. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று அளித்த பேட்டியில், “மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நேபாளத்துக்குத் தப்பிவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. அதுகுறித்து போலீஸார் விசாரித்து அவரைக் கண்டுபிடித்து அழைத்துவர வேண்டும். இதுவரை கலவரம் தொடர்பாக இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகக் கோரி அவரின் வீட்டு முன் போலீஸார் நோட்டீஸே ஒட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT