Published : 08 Oct 2021 12:45 PM
Last Updated : 08 Oct 2021 12:45 PM
உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவை உ.பி. அரசு நியமித்துள்ளது.
ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும் மத்திய உள்துறை இணை அமைச்சர் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவரின் மகனும் இதுவரை போலீஸார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. லக்கிம்பூர் கெரி விவகாரத்தை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடிக்குக் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “லக்கிம்பூர் கெரி சம்பவம் உண்மையில் கொடூரமானது. ஆனால், ஏன் நீங்கள் அதுகுறித்து அறிந்தும் மவுனமாக இருக்கிறீர்கள் மோடி.
கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளுக்காகக் குறைந்தபட்சம் ஒரு இரங்கல் வார்த்தை உங்களிடம் இருந்து வருவது எங்களுக்கு அவசியம். அது ஒன்றும் கடினமானதாக இருக்காதே. நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், எவ்வாறு நீங்கள் எதிர்வினையாற்றி இருப்பீர்கள். தயவுசெய்து எங்களிடம் கூறுங்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, லக்கிம்பூர் கெரி கலவரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த கபில் சிபில் வலியுறுத்தியிருந்தார். லக்கிம்பூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியதும் அதற்கு கபில் சிபல் நன்றியும் தெரிவித்திருந்தார். கபில் சிபில் கூறுகையில், “இந்தியாவில் நீதியின் கோயில்கள் நீதிமன்றங்கள். அதுதான் குரலற்றவர்களின் நம்பிக்கையான இடம்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT