Last Updated : 08 Oct, 2021 10:12 AM

3  

Published : 08 Oct 2021 10:12 AM
Last Updated : 08 Oct 2021 10:12 AM

அதிகாரத்தில் இருப்போர் எதையும் செய்ய முடியும்; இதுதான் மோடி மக்களுக்குச் சொல்லும் செய்தியா?- பிரியங்கா காந்தி காட்டம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேட்டி அளித்த காட்சி | படம்: ஏஎன்ஐ.

பாஹரியாச் 

லக்கிம்பூர் கெரி கலவரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்னும் மத்திய அமைச்சர் பதவியில் அஜய் குமார் மிஸ்ரா தொடர்கிறார் என்பது அதிகாரத்தில் இருப்போர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற செய்தியைத்தான் மத்திய அரசு கூறுகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராடிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் இதுவரை மத்திய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவாவை உ.பி. அரசு நியமித்துள்ளது.

கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளில் 3 பேரின் குடும்பத்தாரைச் சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் சிலர் பஹாரியாச்சில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் செல்ல நேற்று பிரியங்கா காந்தி அங்கு சென்றிருந்தார்.

அப்போது பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''லக்கிம்பூர் கெரி கலவரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் மிஸ்ரா இன்னும் பதவி விலகவில்லை. பதவி நீக்கமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் மக்களுக்கு மத்திய அரசு விடுக்கும் செய்தி என்பது, அதிகாரத்தில் இருப்போர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அமைச்சராக இருந்தாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதாகும்.

யாரேனும் ஒருவர் அதிகாரத்தில் இருந்தால், அமைச்சரோ அல்லது பாஜக தலைவரோ அவரால் எதுவேண்டுமானாலும் செய்யமுடியும். சாமானிய மக்கள், ஏழைகள், தலித்துகள், பெண்களுக்கு நீதி கிடைக்காது. இதுதான் மக்களுக்குச் செல்லும் செய்தியா என்று நரேந்திர மோடியிடம் கூற விரும்புகிறேன்.

கிரிமினல் பின்புலம் இருக்கும் அமைச்சர், அவரின் மகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் அமைச்சர் மிஸ்ரா ஏன் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. விவசாயிகள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்களைச் சந்திக்க நாங்கள் சென்றால் ஒட்டுமொத்த போலீஸ் படையையும் திரட்டி எங்களைத் தடுக்கிறது மாநில அரசு. பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரைப் பதற்றத்திலேயே வைத்து, யாருடனும் பேசமுடியாமல் வைத்துள்ளது.

நாங்கள் இங்கு திருடர்கள் போல் வந்தோம். ஒருவர் தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்தது குற்றமா? இன்னும் மிஸ்ரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. ஆனால், சட்டம் - ஒழுங்கு அடிப்படையில் நாட்டிலேயே உ.பி.தான் நம்பர் ஒன் மாநிலம் என்று கூறுகிறார்கள். சட்டமும் ஒழுங்கும் எங்கிருக்கிறது?''.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x