Published : 07 Oct 2021 12:29 PM
Last Updated : 07 Oct 2021 12:29 PM

லக்கிம்பூர் கலவரம்; உயிரிழந்த விவசாயிகள், பத்திரிகையாளர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு: சத்தீஸ்கர், பஞ்சாப் அரசு அறிவிப்பு

லக்னோ விமான நிலையத்தில் ராகுல் காந்தி தர்ணா போராட்டம் செய்த காட்சி | படம் உதவி: ட்விட்டர்.

லக்னோ

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் நடந்த கலவரத்தில் 4 உழவர்கள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் விவசாயிகள், பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதாக சத்தீஸ்கர், பஞ்சாப் அரசுகள் அறிவித்துள்ளன.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா ஆகியோருக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்திப் போராடினர். அப்போது விவசாயிகள் கூட்டத்துக்குள் அமைச்சரின் வாகனம் புகுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்தக் கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்குச் சென்றபோது போலீஸாரால் தடுக்கப்பட்டு சீதாபூரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

லக்கிம்பூர் கெரி மாவட்டத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாத வகையில் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்திருந்தது. ஆனால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் மாநிலத் துணை முதல்வர், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலர் லக்கிம்பூர் கெரிக்குச் செல்வதற்காக லக்னோ விமான நிலையத்துக்கு வந்தனர்.

ஆனால், அவர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்துவிட்டதால், ராகுல் காந்தி விமான நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து லக்கிம்பூர் கெரிக்குச் செல்ல ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர், பஞ்சாப் துணை முதல்வர் ஆகியோருக்கு உ.பி. அரசு அனுமதியளித்தது. சீதாபூர் துணை ஆட்சியர் பியாரேலால் மவுரி உத்தரவின் பெயரில் பிரியங்கா காந்தியும் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

போலீஸாரின் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர், பஞ்சாப் முதல்வர் ஆகியோர் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதன்பின், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் லக்கிம்பூருக்குச் சென்றனர்.

பாலியா பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த விவசாயி லவ்ப்ரீத் சிங், கலவரத்தில் பலியான பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் ஆகியோரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அளித்த பேட்டியில், “லக்கிம்பூர் கெரி வன்முறை கடந்த 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவூட்டுகிறது. ஜனநாயகத்தை உ.பி. அரசு கேலிக்கூத்தாக்குகிறது. இந்தக் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தாருக்கும், பத்திரிகையாளர் குடும்பத்துக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில், “கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகள், பத்திரிகையாளர் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x