Published : 07 Oct 2021 08:01 AM
Last Updated : 07 Oct 2021 08:01 AM
உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கெரியில் நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தார் நீதி ஒன்றை மட்டும்தான் கேட்கிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
லக்கிம்பூர் கெரியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். பிரியங்கா காந்தி சீதாபூரில் அரசினர் விடுதியில் 36 மணி நேரத்துக்கும் மேலாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் மாநில துணை முதல்வர், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பலர் லக்கிம்பூர் கெரிக்கு செல்வதற்காக லக்னோ விமானநிலையத்துக்கு வந்தனர். ஆனால், அவர்களை அனுமதி்க்க போலீஸார் மறுத்துவிட்டதால், ராகுல் காந்தி விமானநிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து லக்கிம்பூர் கெரிக்குச் செல்ல ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர், பஞ்சாப் துணை முதல்வர் ஆகியோருக்கு உபி. அரசு அனுமதியளித்தது. சீதாபூர் துணை ஆட்சியர் பியாரேலால் மவுரி உத்தரவின்பெயரில் பிரியங்கா காந்தியும் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
போலீஸாரின் விருந்தினர் மாளிகைக்குச் சென்ற பிரியங்கா காந்தி,ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர், பஞ்சாப் முதல்வர் ஆகியோர் ஒருமணிநேரம் ஆலோசனை நடத்தினர். அதன்பின், பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இருவரும் ஒரே காரில் லக்கிம்பூருக்கு புறப்பட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சரண்சி்த் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரும் மற்றொரு காரில் சென்றனர். காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, எம்.பி. தீபேந்தர் ஹூடா ஆகியோரும் தனிக் காரில் சென்றனர்.
பாலியா பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த விவசாயி லவ்ப்ரீத் சிங், கலவரத்தில் பலியான பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் ஆகியோரின் குடும்பத்தினரை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசி ஆறுதல் தெரிவித்தனர். மற்ற விவசாயிகளின் குடும்பத்தை பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி இன்று சந்திக்க உள்ளனர்.
விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்தித்தபின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் சந்தித்த 3 குடும்பத்தாரும் ஒரு விஷயத்தைதான் வலியுறுத்துகிறார்கள், அவர்களுக்கு வேறு ஏதும் தேவையில்லை, இழப்பீடு தேவையில்லை என்று கூறிவிட்டார்கள். அவர்களுக்கு நீதி மட்டும்தான் தேவை எனக் கோருகிறார்கள்.
அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியில் இருக்கும் வரை பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு நீதி கிடைக்காது, அவர் பதவியில் இருந்தால் பாரபட்ச விசாரணைதான் நடக்கும். ஆதலால் அமைச்சர் பதவியை மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சரின் மகன் கைது செய்யப்பட வேண்டும். எந்தவிதமான முதல் தகவல் அறி்க்கை இல்லாமல் என்னைக் கைது செய்த போலீஸார், ஏன் அந்த கிரிமினல்களை கைது செய்யவில்லை”
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT