Published : 07 Oct 2021 03:13 AM
Last Updated : 07 Oct 2021 03:13 AM
டெல்டா மாவட்டங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏக்கருக்கு 2,400 கிலோவுக்கு மேல் கொள்முதல் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு 3.50 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை தாண்டி 4.31 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது.
தற்போது டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தற்போது ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனைக்காக தேங்கியுள்ளன. இதனிடையே, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய தமிழக அரசு ஆன்லைன் பதிவு முறையை அமல்படுத்தியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைஅடுத்து விவசாயிகள் பழைய முறையிலும் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் பெற்று விற்பனை செய்யலாம் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சமாக ஏக்கருக்கு 2,400 கிலோ மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் எனவும், அதற்கு மேல் மகசூல் கிடைக்கும்நெல்லை கொள்முதல் செய்ய முடியாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள்சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாரன் கூறியதாவது:
நடப்பு ஆண்டு நெல் மகசூல் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைத்துள்ளது. ஏக்கருக்கு 3,000 கிலோ வரை கிடைத்துள்ளது. இந்த நெல்லை பாடுபட்டுஅறுவடை செய்து, கிராம நிர்வாக அலுவலர்களிடம் சிட்டா,அடங்கல் பெற்று, கொள்முதல் நிலையங்களில் வாரக்கணக்கில் காத்திருந்து விற்பனை செய்யும்போது, ஏக்கருக்கு அதிகபட்சமாக 2,400 கிலோ மட்டுமே கொள்முதல் செய்யப்படும் எனக் கட்டுப்பாடு விதிக்கின்றனர்.
கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்
இதனால், கூடுதலாக உள்ளநெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்கும்போது, அவர்கள் ஈரப்பதத்தை காரணமாக கூறி அடிமாட்டு விலைக்கு வாங்குகின்றனர். இதனால், சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்தக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தனியார் வியாபாரிகள் சிலர், உள்ளூர் விவசாயிகளிடம் சிட்டா, அடங்கல் பெற்று கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் டெல்டா மாவட்டங்களில் அதிகமாக இருப்பதால்தான் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT