Published : 06 Oct 2021 01:13 PM
Last Updated : 06 Oct 2021 01:13 PM
லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க எதிர்க்கட்சிகளுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானில் இருக்கிறதா? என்று சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்கிம்பூர் கெரியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த 28 மணி நேரமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சிஆர்பிசி 151-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் கெரி மாவட்டத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாத வகையில் 144 தடை உத்தரவையும் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இந்தத் தடையை மீறி இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சத்தீஸ்கர், பஞ்சாப் முதல்வர்கள் செல்ல உள்ளனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் லக்கிம்பூருக்கு வருவதற்கு உ.பி. அரசு தடை விதித்துள்ளது குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதில் கூறியதாவது:
''லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். என்னவிதமான சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறீர்கள்?
உத்தரப் பிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது, ஏன் உ.பி. செல்லும் இந்தியர்கள் தடுக்கப்படுகிறார்கள். ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்ல ஏன் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதென்ன புதுமாதிரியான லாக்டவுனா?
ஆளும் கட்சியின் கூண்டுக்கிளி போன்று மாவட்ட நிர்வாகம் இருக்கிறது. அரசாங்கம் என்ன விதிமுறைகள் கூறினாலும் அதைக் கடைப்பிடிக்கிறது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ராகுல் காந்தி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு அனுமதியில்லை. இவர்கள் எல்லாம் என்ன குற்றம் செய்தார்கள். நாட்டில் புதிதாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறதா? லக்கிம்பூர் கெரிக்கு ஒரு பொதுவான குழுவை அனுப்புவது குறித்து எதிர்க்கட்சிகள் விரைவில் ஆலோசனை நடத்தும்''.
இவ்வாறு ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT