Published : 05 Oct 2021 07:35 PM
Last Updated : 05 Oct 2021 07:35 PM

பிரியங்கா காந்தியை விடுவிக்காவிட்டால் காங்கிரஸ் தொண்டர் கூட்டம் லக்கிம்பூர் கெரியை நோக்கி அணிவகுக்கும்: நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை

நவ்ரோஜ் சிங் சித்து.

சண்டிகர்

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மகனைக் கைது செய்ய வேண்டும்; பிரியங்கா காந்தியை விடுதலை செய்ய வேண்டும், தவறினால் பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர் கூட்டம் லக்கிம்பூர் கெரியை நோக்கி அணிவகுக்கும் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, லக்கிம்பூர் கெரி பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். அவர்கள் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரைச் சந்திக்கவிடாமல் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 28 மணி நேரமாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் மீது சிஆர்பிசி 151-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூருக்குச் செல்வேன் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

இதற்கிடையே உ.பி. சென்றுள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பிரியங்காவைச் சந்திக்க சித்தாபூர் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் இன்று காலை லக்னோ விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதற்கிடையே, திங்களன்று சண்டிகரில் நடந்த லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவைக் கைது செய்யக் கோரி பஞ்சாப் ராஜ் பவனுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய நவ்ஜோத் சிங் சித்து கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், விவசாயிகள் மீது கார் மோதி அவர்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மகனை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை நாளைக்குள் விடுதலை செய்யாவிட்டால், லக்கிம்பூர் கெரிக்கு நடைப்பயணம் செல்வோம் என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சித்து இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

"நாளைக்குள், விவசாயிகளின் கொடூரக் கொலையின் பின்னணியில் உள்ள மத்திய அமைச்சரின் மகன் கைது செய்யப்படாவிட்டால், விவசாயிகளுக்காகப் போராடி சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ள எங்கள் தலைவர் பிரியங்கா காந்தி விடுதலை செய்யப்படாவிட்டால், பஞ்சாப் காங்கிரஸ் தொண்டர் கூட்டம் லக்கிம்பூர் கெரியை நோக்கி அணிவகுக்கும்!".

இவ்வாறு சித்து குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x