Published : 05 Oct 2021 06:23 PM
Last Updated : 05 Oct 2021 06:23 PM
கொள்ளை என்பது காங்கிரஸின் டிஎன்ஏவில் அதிகம் இருப்பதால் அது அவர்களது மனதை விட்டு நீங்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நரேந்திர மோடி அரசின் வளர்ச்சி கொள்கை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதை அடிப்படையாகக் கொண்டது. அரசு சொத்துக்களை விற்பனை செய்வது கொள்ளையடிப்பதை இலக்காகக் கொண்டது என்று காங்கிரஸ் கூறுகிறது.
கொள்ளை என்ற விஷயம் காங்கிரஸின் மனதில் இருந்து என்றைக்குமே அகலாது. ஏனென்றால் அவர்கள் காலத்தில் அது பெரிய அளவில் இருந்தது. ஸ்பெக்ட்ரம், சுரங்கங்கள், நீர் ஆகியவை முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சூறையாடப்பட்டன.
கொள்ளை என்ற வார்த்தை அவர்களின் டிஎன்ஏவில் அதிகம் இருப்பதால் அவர்களால் வேறு எதையும் சிந்திக்க முடியாது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. ஆனாலும் இங்கு தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
இவ்வளவு பெரிய பெரும்பான்மையுடன் சத்தீஸ்கரில் வெற்றி பெற்ற போதிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டெல்லிக்கு செல்கிறார்கள்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரும்பி வந்துவிட்டார்கள் என்று முதல்வர் மகிழ்ச்சியுடன் அறிக்கை வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த கட்சியின் தலைமையின் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக நீங்கள் பதவிக்கு வந்தீர்கள். ஆனால் இன்று உங்கள் தலைமைக்கு தான் அதிகம் சேவை செய்கிறீர்கள். அதுவும் உங்கள் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக இதனை செய்கிறீர்கள்.
காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் என்ன நடந்தது. ராஜீவ்காந்தி பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தபோது நடந்ததை நினைவுபடுத்தி பாருங்கள். அந்த ஐந்து வருடங்களாக அவரால் ஊழல் அற்ற ஆட்சியை நடத்த முடிந்ததா.
மக்களின் ஆதரவை பெறுவதை விட அதனை தக்க வைப்பது மிகவும் கடினம். ஆட்சி செய்வதை விடவும் மக்களுக்கு சேவை செய்வதே முக்கியம். அதிகாரத்தில் இருப்பதன் மூலம் கொள்ளையடிப்பதில் காங்கிரஸ் கட்சியினர் கவனம் செலுத்துகின்றனர். மக்கள் அதைப் பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT