Published : 04 Oct 2021 03:48 PM
Last Updated : 04 Oct 2021 03:48 PM
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு எதிராக கம்பு, லத்திகளை எடுத்து பதிலடி கொடுங்கள். பதிலடி கொடுக்க நினைத்துவிட்டால் சிறைக்குச் செல்வது குறித்தும், ஜாமீன் குறித்தும் கவலைப்படாதீர்கள் என்று ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் விவசாயிகளுக்கு எதிராகப் பேசியுள்ளார்.
மனோகர் லால் கட்டார் பேசிய ஒரு நிமிட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதையடுத்து, இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாநில முதல்வரே விவசாயிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துங்கள் என வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜகவின் கிசான் மோர்ச்சா (விவசாயிகள் பிரிவு) நிர்வாகிகளுடன் பேசும் ஒரு நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் மனோகர் லால் கட்டார் பேசுகையில், “ஹரியாணாவின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு எதிராக 500 முதல் 700 தன்னார்வலர்கள், லத்தி, கம்புகளுடன் பிரிந்து சென்று பதிலடி கொடுங்கள். தெற்கு ஹரியாணாவில் விவசாயிகள் பிரச்சினை பெரிதாக இல்லை. விவசாயிகள் செயலுக்கு லத்தியால் பதிலடி கொடுங்கள். (இந்தப் பேச்சைக் கேட்டதும் நிர்வாகிகள் சிரித்தனர்)
பாஜகவினர் விவசாயிகளுக்கு பதிலடி கொடுக்க முடிவெடுத்துவிட்டால், ஜாமீன் குறித்துக் கவலைப்படாதீர்கள். சிறையில் சில மாதங்கள் இருங்கள். கூட்டங்களில் கற்றுக்கொள்வதைவிட அதிகமாகக் கற்றுக்கொள்வீர்கள். பெரிய தலைவராக உருவாகலாம். வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இந்தப் பேச்சைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
ஹரியாணா முதல்வரின் வன்முறையைத் தூண்டிவிடும் இப்பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லபா கூறுகையில், “ஹரியாணா முதல்வர் உடனடியாகப் பதவி நீக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டப் பதவியில் முதல்வர் அமர்ந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிராக பாஜகவினரைத் தூண்டிவிடுகிறார்.
முதல்வர் பதவிக்கு கட்டார் தகுதியானவர் இல்லை. விவசாயிகளை அடித்து உதைக்கக் கூறிய இந்த முதல்வர் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கருத்துகளை உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்றத்தின் பதிலையும் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “போராடும் விவசாயிகளைக் கம்பால் தாக்கக் கூறும் உங்களின் குருமந்திரமும், சிறைக்குச் செல்லுங்கள், தலைவராகலாம் என்ற அறிவுரையும் ஒருபோதும் வெற்றி பெறாது. மாநிலத்தின் முதல்வர் வன்முறையைப் பரப்பும் வகையில், சமூகத்தை உடைக்கும் வகையில், சட்டம் - ஒழுங்கை அழிக்கும் வகையில் பேசினால், சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்புச் சட்டத்தைச் செயல்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT