Published : 04 Oct 2021 02:43 PM
Last Updated : 04 Oct 2021 02:43 PM

கைது வாரண்ட் இருக்கிறதா? ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்துகொள்வது எனக் கற்றுக்கொள்ளுங்கள்: போலீஸாரிடம் பிரியங்கா காந்தி கடும் வாக்குவாதம்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட காட்சி | படம்: ஏஎன்ஐ.

லக்னோ

ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்துகொள்வது என முதலில் கற்றுக்கொள்ளுங்கள், என்னைக் கைது செய்யும் முன் உயர் அதிகாரிகளிடம் வாரண்ட் பெற்று வாருங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, போலீஸாரிடம் காட்டமாகத் தெரிவித்தார்.

லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் மூத்த நிர்வாகி தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலர் லக்கிம்பூருக்கு நேற்று இரவு சென்றனர்.

ஆனால், பிரியங்கா காந்தி சென்ற வாகனத்தை சீதாப்பூர் பகுதியிலேயே தடுத்து நிறுத்திய போலீஸார், அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். கைது செய்ய வந்தபோது போலீஸாருடன் பிரியங்கா காந்தி வாக்குவாதம் செய்த வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

பிரியங்கா காந்தி போலீஸாருடன் நடத்திய வாக்குவாதம் குறித்து நெட்டிசன்கள், கடந்த 44 ஆண்டுகளுக்கு முன் ஜனதா ஆட்சியில் பிரியங்கா காந்தியின் பாட்டி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாக்குவாதம் செய்தது போன்று இருந்தது எனத் தெரிவித்துள்ளனர்.

தன்னைக் கைது செய்ய முயன்ற போலீஸாரிடம் பிரியங்கா காந்தி வாதிடுகையில், “என்னை எதற்காகக் தள்ளிக்கொண்டு சென்று போலீஸார் வாகனத்தில் ஏற்ற முயல்கிறீர்கள். என்னைத் தாக்க முயல்கிறீர்கள், என்னைக் கடத்த முயல்கிறீர்களா, என்னைத் துன்புறுத்தி, காயம் ஏற்படுத்த முயல்கிறீர்களா? நான் அனைத்தையும் புரிந்துகொண்டேன். உங்கள் உயர் அதிகாரிகள், அமைச்சர்களிடம் வாரண்ட் பெற்று வாருங்கள். முதலில் ஒரு பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்வது எனக் கற்றுக்கொள்ளுங்கள்.

அரசியலைப் பயன்படுத்தி விவசாயிகளை அடக்கப் பார்க்கிறது இந்த அரசு என்பது புரிகிறது. இது விவசாயிகளின் தேசம். பாஜகவின் தேசம் அல்ல. பாதிக்கப்பட்ட நபர்களைச் சந்திக்கச் செல்ல முயன்றதைத் தவிர எந்தக் குற்றமும் செய்யவில்லை. எங்களை எதற்காகத் தடுத்து நிறுத்தினீர்கள்?

இது உங்களின் ஆட்சிக்கு உட்படாத பகுதியாக இருந்தால்கூட, இந்த தேசத்திற்கென சட்டம், நீதி இருக்கிறது. என்னைத் தள்ளிக்கொண்டு வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியிருக்கிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

மற்றொரு வீடியோவில் மாநிலங்களவை எம்.பி. தீபேந்தர் ஹூடாவை போலீஸார் தள்ளிக்கொண்டு சென்று போலீஸார் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். இதைப் பார்த்த பிரியங்கா காந்தி போலீஸாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜக்கார் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கடந்த 1977-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்திரா காந்தி கைது செய்யப்பட்டார். அதுபோன்று இன்று பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருப்பது பாஜக ஆட்சியின் முடிவு தொடங்கிவிட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. இந்த நாளில், மீண்டும் இந்திரா திரும்பிவிட்டார்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளைக் கொலை செய்தவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

ஆனால், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற பிரியங்கா காந்தியை யோகி அரசு தடுக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பிரியங்கா காந்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. உங்களுக்கு அதிகமான சக்தியை அளிக்கிறோம் பிரியங்கா” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x