Published : 04 Oct 2021 01:08 PM
Last Updated : 04 Oct 2021 01:08 PM
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரி பகுதியில் நான் செல்லக் கூடாது என்றால் உத்தரப் பிரதேசம் செல்ல தனியாக விசா வாங்க வேண்டுமா என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்கச் சென்றபோது அவர்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர்.
அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க பஞ்சாப் துணை முதல்வர், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் இன்று லக்னோ வர இருந்தனர். அடுத்த ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்குப் பொறுப்பாளராகவும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை காங்கிரஸ் நியமித்துள்ளது.
இந்த நேரத்தில் பூபேஷ் பாகல் சென்று விவசாயிகளைச் சந்தித்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகிவிடும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் எனக் கருதி அவர்கள் இருவருக்கும் அனுமதி மறுத்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ராய்பபூரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
''காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று இரவு லக்கிம்பூர் சென்றபோது அவர் சீதாபூரில் கைது செய்யப்பட்டார். இன்று காலை நான் லக்கிம்பூர் செல்லத் திட்டமிட்டேன். விமானம் தயாராக இருக்கிறது. ஆனால், லக்னோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க உ.பி. அரசு அனுமதி மறுத்துவிட்டது.
லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், லக்னோவில் எனது விமானம் தரையிறங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது? ஏன் அனுமதிக்கக் கூடாது? மக்களின் உரிமை உ.பி.யில் ரத்து செய்யப்பட்டிருக்கிறதா, உத்தரப் பிரதேசத்துக்குச் செல்ல தனியாக நான் விசா வாங்க வேண்டுமா. ஏன் மக்கள் லக்கிம்பூர் செல்ல அனுமதிக்கப்படவில்லை?
இது துரதிர்ஷ்டமானது. மக்களின் உரிமைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. மக்கள் தங்களின் இரங்கலை, வருத்தத்தைத்கூடத் தெரிவிக்கக் கூடாதா, நாங்கள் செல்ல உ.பி. அரசு அனுமதி மறுத்தால், பாஜகவின் மனநிலை எதைக் குறிக்கிறது?
லக்கிம்பூரில் விவசாயிகள் தாக்கப்பட்டது பாஜக அரசின் மனநிலையைக் காட்டுகிறது. யாரெல்லாம் பாஜகவுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை நசுக்கி அழிப்பதுதான் மனநிலையா? இதுபோன்ற மனநிலை மிக மோசமானது. ஒட்டுமொத்த தேசமும் கிளர்ந்தெழும். ஒவ்வொருவரும் லக்கிம்பூர் செல்ல வேண்டியது வரும்.
ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வார்த்தையைக் கூறுவதையே உ.பி. முதல்வர் வழக்கமாக வைத்துள்ளார். சட்டம்- ஒழுங்கு பிரச்சினைக்காகத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் ஆளும் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கையும், மீறலையும் தேசமே வேடிக்கை பார்க்கிறது. ஆதித்யநாத் ஆதரவாளர்களும், பாஜவினரே இதைச் செய்துள்ளதால், முதல்வரால் ஒன்றும் செய்ய முடியாது''.
இவ்வாறு பூபேஷ் பாகல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT