Published : 02 Oct 2021 05:37 PM
Last Updated : 02 Oct 2021 05:37 PM
ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த, சிராக் பாஸ்வானுக்கும், மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸுக்கும்தடை விதித்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப்பின் அவரின் லோக் ஜன சக்தி கட்சிக்கு உரிமை கொண்டாடி பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானும், பாஸ்வானின் இளைய சகோதரரும் மத்திய அமைச்சரும் பசுபதி குமார் பராஸும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப்பின் கட்சிக்கு தலைவராக அவரின் மகனும் மக்களவை எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் உரிமை கொண்டாடினார். ஆனால், பாஸ்வானின் இளைய சகோதரரும், மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பராஸும் கட்சிக்கு உரிமை கொண்டாடினர்.
கடந்த ஜூன் 14ம் தேதி பசுபதி பராஸ் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியகடிதத்தில் “ லோக் ஜன சக்தி கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் தான் என உரிமை கோரியிருந்தார்”
ஆனால் சிராக் பாஸ்வான் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி, தன்னுடைய கட்சி பசுபதி பராஸ் உள்ளிட்ட 5 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டது, கட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்றுள்ளேன் என கடந்த மாதம் 10 ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
பிஹார் மாநிலத்தில் அக்டோபர் 30ம் தேதி இரு தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. சிராக் பாஸ்வான், பசுபதி குமார் பராஸ் இருவரும் வரும 8 ஆம் தேதிக்குள் விரைந்து முடிவு எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர்.
இதையடுத்து தேர்தல் ஆணையம் இன்று இரு தரப்புக்கும் பொதுவாக லோக் ஜன சக்தி கட்சியின் பெயரையும், சின்னத்தையும் முடக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
லோக் ஜன சக்தி கட்சியின் பெயரையும், கட்சியின் சி்ன்னத்தையும் சிராக் பாஸ்வான், பசுபதி குமார் பராஸ் இருவரும் தேர்தலில் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்த இடைக்கால உத்தரவு குஷேஸ்வர் அஸ்தான் தாராபூர் இடைத்தேர்தலுக்கு மட்டுமல்ல, தேர்தல் ஆணையம் இறுதிமுடிவு எடுக்கும்வரை நடைமுறையில் இருக்கும்.
இரு தரப்பினரும் தங்கள் உரிமைகளையும், நலன்களையும் காப்பாற்றிக்கொள்ள கட்சியின் பெயரையும், சின்னமான பங்களாவீட்டையும் பயன்படுத்த உரிமை கோருகின்றனர். கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்ய தற்போது அவகாசம் இல்லை என்பதால், கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
வரும் தேர்தலுக்கு இரு தரப்பினரும் கட்சிக்கு புதிய பெயரையும், சின்னத்தையும் சுயமாகத் தேர்வு செய்யலாம். கட்சியின் பெயர், 3 விதமான சின்னங்களைத் தேர்வு செய்து திங்கள்கிழமை பிற்பகலுக்குள் இரு தரப்பினரும் தனித்தனியாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் கட்சிக்கு உரிமை கோரும்பட்சத்தில் இரு தரப்பினரும் தங்களுக்கு ஆதரவான ஆவணங்களையும் நவம்பர் 5 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT