Published : 02 Oct 2021 05:04 PM
Last Updated : 02 Oct 2021 05:04 PM
பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் சிக்கல்களை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரிந்தர் சிங்கிடம் பேசுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு உரிமையில்லை என்று சிவேசனா கட்சி சாடியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங், மாநிலத்தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலில் பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாபின் புதிய முதல்வராக சரன்ஜித் சி்ங் சன்னி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் கடந்த இரு நாட்களுக்குமுன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் இருந்து தீவிர காங்கிரஸ் விசுவாசியாக இருந்த அமரிந்தர் சிங் குடும்பத்தினர் கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் அமரிந்தர் சிங் விரைவில் பாஜகவில் இணைவார் அதனால்தான் அமித் ஷாவை சந்திக்கப் போகிறார் என்று பேச்சு எழுந்தது. ஆனால் அதை மறுத்த அமரிந்தர் சிங் தரப்பு, பஞ்சாப் எல்லைப் பிரச்சினை குறித்து ஆலோசித்ததார் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் அமரிந்தர் சிங், அமித் ஷா சந்திப்பு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பஞ்சாப் மாநிலத்தின் பிரச்சினையாக இருந்தாலும், மாநிலத்தின் எல்லைப் பிரச்சினையாக இருந்தாலும், அது தொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சன்னியிடம்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்க வேண்டும்.
அதை விடுத்து மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அமரிந்தர் சிங்கிடம் எல்லைப் பிரச்சினைகள் குறித்தும், மாநிலப் பிரச்சினைகள் குறித்துப் பேச அமித் ஷாவுக்கு உரிமையில்லை.
காஷ்மீர் மற்றும் லடாக்கில் எல்லையில் யாரேனும் ஊடுருவத் தொடங்கிவிட்டார்களா?
இந்த விவகாரம் உண்மையில் முக்கியத்துவமாக இருந்தால், உள்துறை அமைச்சர் தற்போதைய பஞ்சாப் முதல்வரிடம்தான் பேச வேண்டும். பதவிநீக்கப்பட்ட முதல்வரிடம் பேசுவது எந்த முறை. மத்திய அரசு புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது இது நியாயமானதுஅல்ல.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்குக்கு தான் பதவியிழந்தபின்புதான் எல்லைப் பிரச்சினை குறித்து நினைவுக்கு வந்ததா. பாகிஸ்தான் தினசரி ஊடுருவிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால், முதல்வர் பதவியை இழந்தபின்புதான் அமரிந்தர் சிங் எல்லைப் பிரச்சினை குறித்து விழித்துக்கொண்டுள்ளார்.
கேப்டன் அமரிந்தர் சிங் பாஜகவில் சேரவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருந்துகொண்டு கட்சிக்கு சேதாரத்தை ஏற்படுத்துகிறார். அமரிந்தர் சிங் அமித் ஷாவுடன் சந்திப்பு நடத்தியிருப்பதால் அவர் பாஜகவுக்கு செல்கிறாரா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். வெளியே இருந்தவாரே காங்கிரஸ் கட்சியை சேதப்படுத்த அமரிந்தர் சிங் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT