Published : 01 Oct 2021 04:30 PM
Last Updated : 01 Oct 2021 04:30 PM
பிரதமர் மோடிக்கு சவாலாக நிற்க காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி மட்டுமல்ல, யாருமே இல்லை என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்த நட்வர் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நட்வர் சிங். சமீபத்தில் சோனியா காந்தியின் தலைமை குறித்துக் கடுமையாக விமர்சித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் நடக்கும் குழப்பங்கள் குறித்து நட்வர் சிங் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''ராகுல் காந்தியால் பிரதமர் மோடிக்கு சவாலாக இருக்க முடியுமா. அவ்வாறு இருப்பார் என நினைக்கிறீர்களா. பிரதமர் மோடியின் முன் ராகுலால் எதிர்த்து நிற்க முடியுமா. பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் விவாதம் நடத்துங்கள். ராகுல் காந்தியின் நேர்காணலை சேனலில் பார்த்திருப்பீர்கள்.
மோடி ஒரு பேச்சாளர், அச்சமின்றி, துணிச்சலாகப் பேசக்கூடியவர். மோடிக்கு முன் ராகுல் காந்தியால் ஒன்றும் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியில் மோடிக்கு சவால் விடுக்க ராகுல் காந்தி மட்டுமல்ல, யாருமே இல்லை. ஏனென்றால் மோடி மிகப்பெரிய பேச்சாளர்.
நடந்து முடிந்த 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும் என நான் நினைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு நிலைப்பாடு எடுத்திருந்தது. ஆனால், அந்த அனுமானம் தவறானது. அவர்களுக்கு நல்ல ஆலோசகர் யாருமில்லை.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பலம் குறைந்ததற்குக் கூட ராகுல் காந்தியைத்தான் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர். காங்கிரஸ் கட்சியின் தற்போதைய குழப்பத்துக்கும், சிக்கலுக்கும் 3 பேர்தான் காரணம். அதில் ஒருவர் ராகுல் காந்தி, கட்சியில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தொடர்ந்து அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறார்''.
இவ்வாறு நட்வர் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT