Published : 30 Sep 2021 07:45 AM
Last Updated : 30 Sep 2021 07:45 AM
கர்நாடக மாநிலம் கொப்பலில் கோயிலில் நுழைந்த 4 வயது தலித் குழந்தைக்கு கடந்த வாரம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல குல்பர்காவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல ஹாசன் மாவட்டத்தின் தின்டகூரு உள்ளிட்ட பிற இடங்களிலும் தலித் மக்களை ஆதிக்க சாதியினர் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதாக அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னராயபட்டணா வட்டாட்சியர் ஜே.பி.மாருதி அனைத்து சாதியினரையும் அழைத்து தின்டகூருவில் கூட்டம் நடத்தினார். இதை பெரும்பாலான சாதியினர் புறக்கணித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாரிகள் மற்றும் போலீஸார் முன்னிலையில் தலித் மக்கள் தின்டகூரு கோயிலுக்குள் நுழைந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து தின்டகூருவை சுற்றியுள்ள சோமேஷ்வரா கோயில், மஹாலட்சுமி கோயில், கேசவா கோயில் ஆகியவற்றிலும் நேற்று போலீஸார் முன்னிலையில் தலித் மக்கள் கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்தினர்.
இதுகுறித்து 75 வயது திம்மையாகூறும்போது, “நான் இதேகிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் இதுவரை கோயிலுக்குள் சென்றதில்லை. திருவிழா நாட்களில் கோயிலுக்கு வெளியே நின்று வணங்குவேன். என் அப்பா, தாத்தாவும் இந்த கோயிலுக்குள் நுழைந்ததில்லை. முதல் முறையாக கோயிலுக்குள் பூஜை செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
பீர் ஆர்மி அமைப்பின் நிர்வாகி சந்தோஷ் கூறும்போது, “ஹாசன் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக தலித் மக்களுக்கு மறுக்கப் பட்டிருந்த ஆலய நுழைவு உரிமைபெற்றது பெரிய சாதனை ஆகும். இதற்காக நீண்ட காலமாக தலித் மக்கள் போராடி வந்துள்ளனர்.
ஏராளமானோர் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர். தற்போது கோயிலுக்கு சென்று பூஜை செய்ததை விட, அதற்கான உரிமையை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
தலித் மக்களின் ஆலய நுழைவை தொடர்ந்து தின்டகூருவை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஹாசன் மாவட்டம் தின்டகூருவில் உள்ள மல்லேஸ்வரா கோயிலுக்குள் சென்று வழிபட்ட தலித் மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT