Published : 28 Sep 2021 03:15 PM
Last Updated : 28 Sep 2021 03:15 PM

கரோனா வைரஸ் நீண்ட காலத்துக்கு மனிதர்களுடன் பயணிக்கும்: உலக சுகாதார அமைப்பு  தகவல்

பூனம் கேத்ரபால் சிங் | படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி

உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் மிக நீண்ட காலத்துக்கு மனிதர்களுடன் பயணிக்கும். கரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வருமா என்பது மனிதர்கள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, சமூகத்தில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் முடிவாகும் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் பூனம் கேத்ரபால்சிங் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கரோனா வைரஸ் மனிதர்களுடன் மிக நீண்ட காலத்துக்குப் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு காரணிகளை அடிப்படையாக வைத்தே கரோனா வைரஸ் முடிவுக்கு வருகிறதா என்பது தெரியவரும். அதாவது மக்கள் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு அதிகரிப்பு, தடுப்பூசி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கரோனா வைரஸ் முடிவுக்கு வருவது தெரியவரும்.

கரோனா வைரஸுடன் மக்கள் வாழப் பழகிவிட்டால், கரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்துவிடும். இப்போது நாம்தான் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். வைரஸ் நம்மைக் கட்டுப்படுத்தி வைக்கவில்லை.

எங்கு மக்கள் அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்களோ, தடுப்பூசி செலுத்துதல் எங்கு அதிகமாக இருந்ததோ, அங்கு கரோனா வைரஸின் பாதிப்பு எதிர்காலத்தில் மற்ற மக்களுக்குப் பரவுவதைவிட இங்கு பாதிப்பு குறைவாக இருக்கும்.

கோவாக்ஸின் தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்த அனுமதி வழங்குவதில் உலக சுகாதார அமைப்பு தாமதம் செய்யவில்லை. பல்வேறு வகையான தொழில்நுட்ப ரீதியான செயல் முறைகள் இன்னும் நிறைவடையவில்லை. அந்த தொழில்நுட்ப நடைமுறைகள் முடிந்தபின், உரிய அனுமதி கிடைக்கும்.

உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்தாத மக்களிடையேதான் கரோனா தொற்றும், பாதிப்பும் இருந்து வருகிறது. அப்படியிருக்கும்போது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாதபோது பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை. உலகில் பல கோடி மக்கள் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசிக்குக் காத்திருக்கும்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் அந்த மக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும்.

அதேசமயம், பூஸ்டர் தடுப்பூசியை வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு நிராகரிக்கவில்லை. அறிவியல்பூர்வமான ஆதாரங்கள், பரிந்துரைகள் அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும். பூஸ்டர் டோஸ் செலுத்தும் முன் மக்கள் உடல்நிலை குறித்த புள்ளிவிவரங்கள், நோய் எதிர்ப்பு சக்தி நிலவரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்துதான் பரிந்துரைக்கப்படும்''.

இவ்வாறு பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x