Published : 28 Sep 2021 01:36 PM
Last Updated : 28 Sep 2021 01:36 PM
கன்னையா குமார் இன்று காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாட்னா அலுவலகத்தில் தனது செலவில் பொருத்தியிருந்த ஏசியை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்க முன்னாள் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களில் ஒருவருமான கன்னையா குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்து வந்தார். இதனால் விரைவில் காங்கிரஸில் இணைவார் எனக்கூறப்பட்டது.
அதுபோலவே குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார். இது தொடர்பாகவும் மேவானியுடன் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பேசி வந்தது சமூகமான முடிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. கன்னையா குமார் மற்றும் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இன்று இணையவுள்ளனர்.
இந்தநிலையில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கன்னையா குமார் சில நாட்களுக்கு முன்பு பாட்னாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கன்னையா குமார் அங்கு தனது அறையில் தனது செலவில் பொருத்தப்பட்டு இருந்த ஏசியை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிஹார் மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நரேஷ் பாண்டே கூறியதாவது:
"கன்னையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான தேசிய நிர்வாக கவுன்சிலில் உறுப்பினராக உள்ளார்.
கடந்த 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கன்னையா குமார் கலந்து கொண்டார். அப்போது அவரை சந்தித்தபோது அவர் கட்சியை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கவில்லை. கன்னையா குமார் காங்கிரஸில் சேரமாட்டார் என்று நான் இன்னும் நம்புகிறேன். ஏனென்றால் அவருடைய மனநிலை கம்யூனிஸ்ட் மற்றும் அடித்தள மக்கள் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டது.
சில நாட்களுக்கு முன்பு பாட்னாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்திற்கு வந்த கன்னையாகுமார் அங்கு தனது அறையில் பொருத்தப்பட்டு இருந்த ஏசியை எடுத்துச் சென்றார். அவரது சொந்த செலவில் நிறுவியதால் நான் தடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT