Published : 26 Sep 2021 03:27 PM
Last Updated : 26 Sep 2021 03:27 PM
பிஹார் மாநிலம், மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சலவைத் தொழிலாளி பெண்ணிடம் பலாத்காரமுயற்சியில் ஈடுபட்டதற்காக 2 ஆயிரம் பெண்களின் ஆடைகளை இலவசமாக சலவை செய்ய உத்தரவிட்ட நீதிபதி பணியாற்றத் தடைவிதிக்கப்பட்டது.
மதுபானி மாவட்டம் மஜ்ஹோர் கிராமத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர் லாலன் குமார். இவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்கார செய்யமுயன்ற குற்றச்சாட்டு எழுந்து கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் லாலன் குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி லாலன் குமார், மாவட்ட ஜூடிசியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த ஜான்ஜிஹர்பூர் கூடுதல் நீதிபதி அவினாஷ் குமார், வித்தியாசமான தீர்ப்பு வழங்கினார்.
அதில்” லாலன் குமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அடுத்த 6 மாதங்களுக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பெண்களின் ஆடைகளை இலவசமாக சலவை செய்து தர வேண்டும். இலவசமாக சோப்பு பவுடர், சோப்பு உள்ளிட்டவற்றை வாங்கித் தர வேண்டும். துவைத்த துணிகளை இஸ்திரி போட்டுக் கொடுக்க வேண்டும் “ எனக்கூறி நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
லாலன் குமார் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கூறுகையில் “ லாலன் குமார் செய்யும் தொழிலுக்கு ஏற்ப சமூகச் சேவையைச் செய்ய நீதிபதி உத்தரவிட்டு, பெண்களை மதிக்கவும் கற்றுக்கொடுத்துள்ளார்.” எனத் தெரிவித்தார்
அந்த கிராமத்தின் தலைவர் நசிமா காட்டூன் கூறுகையில் “ நீதிமன்றத்தின் வித்தியாசமான தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது”எனத் தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு பெண்களின் ஆடைகளை இலவசமாக சலவை செய்ய வேண்டும் என்ற நீதிபதி தீர்ப்பு அளித்து ஜாமீன் வழங்கியது பெரும் சர்ச்சையானது.
இதையடுத்து, ஜாமீன் வழங்கிய நீதிபதி அவினாஷ் குமார் மறு உத்தரவு வரும்வரை எந்தவிதமான நீதிமன்ற பணிகளையும் கவனிக்க பாட்னா உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
நீதிபதி அவினாஷ் குமார் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்குவது முதல்முறைஅல்ல. கடந்த ஏப்ரல் மாதம், பிஹாரைச் சேர்ந்த கடுமையான 2016ம் ஆண்டு தடைச்ச ட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி அவினாஷ் குமார், ஜாமீன் பெறும் இளைஞர் அடுத்த 3 மாதங்களுக்கு ஏழை குழந்தைகளுக்கு கல்விபுகட்டி, பெற்றோரிடம் இருந்து கடிதம் பெற்றுவர வேண்டும்.
கடந்த ஜூலை மாதம் ஒரு வழக்கில் ஒருவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிபதி அவினாஷ் குமார், ஜாமீன் பெறுபவர் அவருடைய கிராமத்தில் உள்ள தலித் குழந்தைகள் 5 பேருக்கு நாள்தோறும் அரைலிட்டர் பால் இலவசமாக வழங்கிட வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
மேலும் சில வழக்குகளை சரியாக விசாரிக்கவில்லை எனக் கூறி பாட்னா மாவட்ட நீதிபதி, போலீஸ் கண்காணிப்பாளர் இருவருக்கும் நீதிபதி அவினாஷ் குமார் அபராதம் விதித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT