Published : 26 Sep 2021 12:17 PM
Last Updated : 26 Sep 2021 12:17 PM
யூபிஎஸ்சி தேர்வில் சாதித்த சகோதரிகளை தேசமே கொண்டாடி வருகிறது. யூபிஎஸ்சி 2020 தேர்வில் ரியா தாபி என்ற இளம் பெண் அனைத்திந்திய அளவில் 15வது இடம் பிடித்துள்ளார். இவர் ஐஏஎஸ் அதிகாரி டீனா டாபியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி தேர்வில் டீனா டாபி முதலிடம் பெற்றார். அதுவும் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியலினப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.தற்போது அவரது சகோதரி ரியா டாபியும் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவர் அனைத்திந்திய அளவில் 15வது இடம் பெற்றுள்ளார்.
கடந்த வெள்ளியன்று யூபிஎஸ்சி தேர்வு 2020 முடிவுகள் வெளியாகின. இதில் இந்திய அளவில் சுபம் குமார் முதலிடம் பிடித்தார். இவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 24 வயதே ஆன இந்த இளைஞர் தனது மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் ஐவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தத் தேர்வில் ரியா தாபி என்ற இளம்பெண் 15வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக ரியா டாபி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் இப்போது மகிழ்ச்சி, நன்றியுணர்வு எனப் பல உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளேன். எனது பெற்றோரும், சகோதரியும் தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அவர்கள் இல்லாமல் இது நடந்திருக்காது.
எனது தாயார் தான் எனது ரோல்மாடல். கடைசியாக தங்கள் அனைவரின் பாராட்டுதல்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT