Published : 26 Sep 2021 09:56 AM
Last Updated : 26 Sep 2021 09:56 AM
கரோனாவுக்கு எதிராக நாங்கள் போராடிய அனுபவம் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது என்னவென்றால், நாம் ஒற்றுமையாக இருந்தால், நாம் வலிமையாகவும், சிறப்பாகவும் மாறுகிறோம் என்பதை உணர்த்தியது என்று பிரதமர் மோடி பெருமித்தோடு தெரிவித்தார்.
குலோபல் சிட்டிஸன் லைவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக உலகளவில் அச்சுறுத்தும் பெருந்தொற்றால் மனிதகுலம் போராட்டத்தைச் சந்தித்துவருகிறது. கரோனாவுக்கு எதிராக நாங்கள் போராடிய எங்கள் அனுபவப் பகிர்வு என்பது, நாங்கள் ஒற்றுமையாக இருக்கும்போது வலிமையாக மாறுகிறோம் என்பதை உணர்த்தியது.
கரோனா போர் வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் தங்களின் சிறந்த பங்களிப்பை அளித்து கரோனா தோற்கடிக்க காரணமாக அமைந்தார்கள். குறுகிய காலத்துக்குள் எங்களுடைய அறிவியல் வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள் தடுப்பூசியை கண்டுபிடித்து உத்வேகத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த உலகின் முன் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்சினை பருவநிலை மாறுபாடாகும். உலகளவில் இருக்கும் மக்கள் எளிமையான, வெற்றிகரமான வழியின் மூலம் பருவநிலை மாறுபாட்டை தணிக்க தங்களின் வாழ்க்கை முறையை இயற்கையோடு இணைந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும். உலக சுற்றுச்சூழலில் எந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என விரும்பினால் மாற்றம்முதலில் நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்.
அஹிம்சை, அமைதி தத்துவங்களை வழங்கிய மகாத்மா காந்தியை உலகம் நன்கறியும், உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுச்சூழல் வல்லுநர்களில் மகாத்மா காந்தியும் ஒருவர். தன்னுடைய வாழ்க்கையில் சுற்றுப்புறத்துக்கு எந்தவிதமான கேடும் செய்யாமல் வாழ்ந்தவர் மகாத்மா காந்தி. அவர் என்ன செய்தாலும இந்த பூமி சிறப்படையவே செய்தார். இந்த பூமியின் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நாம்,நம்முடைய பணி அறக்கட்டளையை காப்பதாகும என்று மகாத்மா காந்தி இயற்கையை பாதுகாப்பது குறித்து தெரிவி்த்துள்ளார்.
சர்வதேச சோலார் கூட்டமைப்பு மற்றும் பேரிடர் தடுப்பு கட்டமைப்பின் கீழ் உலகை ஒருகுடையின் கீழ் கொண்டுவந்ததற்கு இந்தியா பெருமைப்படுகிறது. மனிதநேய மேம்பாட்டுக்காக இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம்.
உலகளவில் கரோனாவுக்கு எதிராக நாடுகள் போராடினாலும், வறுமைக்கு எதிரான போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏழைகள் தொடர்ந்து அரசாங்கத்தை நம்பியிருந்தால், ஏழ்மைக்கு எதிராக போராட முடியாது. ஏழைகள் அரசாங்கங்களை நம்பிக்கையான கூட்டாளிகளாக, பார்க்கத் தொடங்கும் போது வறுமையை எதிர்த்துப் போராட முடியும். ஏழைகளுக்கு அதிகாரம் வழங்க ஆட்சியதிகாரம் பயன்படும்போது, வறுமைக்கு எதிராக போராடுவது வலுவடையும்.
கோடிக்கணக்கான வங்கிக்கணக்கு இல்லாத மக்களுக்கு இந்தியா வங்கிக் கணக்கு அளித்துள்ளது, லட்சக்கணக்கான மக்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டங்களை வழங்கியுள்ளது, 50 கோடி இந்தியர்களுக்கு தரமான சுகாதாரச் சேவைகளை வழங்கியது. வீடில்லாத 3 கோடி இந்தியர்களுக்கு வீடு வழங்கியுள்ளது அரசு.
வீடு என்பது குடியிருப்பதற்கு மட்டுமல்ல, அந்த வீட்டின் கூரைதான் ஏழைகளுக்கு கவுரவத்தை வழங்குகிறது. கடந்த ஆண்டிலிருந்து தொடர்ந்து 7 மாதங்களாக அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பு வழங்கும் மிகப்பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதுவரை 80 கோடி மக்களுக்கு மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வறுமையை எதிர்த்து ஏழைகள் போராடத் தேவையான வலிமையை வழங்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT