Published : 18 Mar 2016 11:14 AM
Last Updated : 18 Mar 2016 11:14 AM
அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவில் திருத்தம் செய்யப்பட் டுள்ளது. மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களின் படங்களும் இடம்பெற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த ஆண்டு மே 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்குவங்கம் மற்றும் கர்நாடகா, சத்தீஸ்கர், அசாம், உத்தரப் பிரதேசம், ஒடிஷா மாநிலங்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்திய, மாநில அரசுகள் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, ‘அரசு விளம்பரங் களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது என்ற உத்தரவு தவறானது. அரசின் திட்டங்களைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. அரசு விளம்பரங்கள், பதாகைகள் மூலம்தான் அரசின் திட்டங்கள், கொள்கைகள் மக்களைச் சென்றடையும். தகவல்கள் என்று வரும்போது அதில் தலைவர் களின் படங்களும் அடங்கும். கூட்டாட்சி நடைமுறையில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பது தனிநபர் துதிபாடும் முறைக்கு வழிவகுக்கும். ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். ஜனநாயக நடை முறையில் பிரதமருக்கும் முதல்வருக் கும் பெரிய வேறுபாடு இல்லை. இருவருமே மக்களின் பிரதிநிதிகள் தான். இதில் ஒருவரது படத்தை வெளி யிட அனுமதிப்பதும், மற்றவர்கள் படத்தை வெளியிட தடை விதிப்பதும் தவறானது. ஐந்து ஆண்டுகளுக்கு ஓர் ஆட்சி நடக்கும்போது பிரதமர் படத்தை மட்டும் வெளியிட்டால், மற்ற அமைச்சர்கள் முகம் அற்றவர்களாக, வெளியில் தெரியாதவர்களாக ஆகிவிடுவார்கள்’ என்று வாதிட்டார்.
போலியோ சொட்டு மருந்து வழங்குதல், மருத்துவத் திட்டங்களை செயல்படுத்துதல், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தலைவர் களின் படங்களை வெளியிடும்போது மக்கள் ஈர்க்கப்பட்டு, திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும் என்றும் அவர் வாதிட்டார்.
இந்த வழக்கை முதலில் தாக்கல் செய்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில மாநில அரசுகள் உத்தரவை மீறியுள்ளன. அந்த மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை கடுமையாக பின்பற்ற கண் காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங் களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத் திருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி.கோஸ் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘அரசு விளம்பரங்களில் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்ட தலைவர்கள் தவிர, சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர், மாநில முதல்வர், சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மாநில அமைச்சர் ஆகியோரின் படங்களை வெளியிடலாம். மற்றபடி, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் அமலில் இருக்கும்’ என்று உத்தரவிட்டனர்.
இதன்மூலம் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் படங்களை வெளியிட கடந்த 10 மாதங்களாக இருந்த தடை நீங்கியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT