Published : 24 Sep 2021 06:41 PM
Last Updated : 24 Sep 2021 06:41 PM

‘‘நான் முதல்வராக தொடர வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும்’’ - மம்தா பானர்ஜி உருக்கம்

கொல்கத்தா

நான் உங்கள் முதல்வராக தொடர வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாக கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்எல்ஏவும், வேளாண்அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார். இடைத்தேர்தல் இம்மாதம் 30-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதியும் நடக்கிறது.

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

தேர்தலுக்கு சில மாதங்களுக்குப் பிறகு பாஜக தொண்டர் ஒருவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். இத்தகைய இறப்புகள் எப்போதும் துரதிருஷ்டவசமானது. அவர்கள் என் வீட்டிற்கு அருகில் உடலுடன் வந்தனர் போராட்டம் நடத்தினர். ஆனால் என்ஆர்சி தொடர்பாக அசாமில் பலர் கொல்லப்பட்டனர். பாஜகவின் ஆட்சியில் எந்த சட்டம் - ஒழுங்கும் இல்லை. உங்களுக்கு வெட்கம் இல்லையா?

பாஜக மிகவும் வன்முறை கட்சி, கொடூரமானது மற்றும் கொலைகாரர்களின் கட்சி. அவர்கள் ஒவ்வொரு நாளும் ரவுடி தனம் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் வெடிகுண்டு வைத்துக் கொள்கிறார்கள். உங்களை யார் தாக்க முடியும்? உங்களைத் தொடுவதற்கு கூட நாங்கள் வெட்கப்படுகிறோம். திரிணமூல் காங்கிரஸ் ரவுடி கட்சி அல்ல.

கடந்த நான்கு மணி நேரமாக மழை பெய்து வருகிறது. மழையைப் பற்றி கவலைப்படாதீர்கள். தேர்தல் நாளில் வாக்களிக்க வாருங்கள். தேர்தல் நாள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் சாக்குப்போக்கு சொல்லாமல் வாக்களிக்க வேண்டும்.

மழை பெய்தாலும் அல்லது புயல் வந்தாலும் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் முதல்வராக தொடர வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து எனக்கு வாக்களிக்க வேண்டும். சட்டப்பேரவையில் எங்கள் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது.

முதல்வராக பதவியேற்கக்கூடிய தலைவர்களுக்கு எங்கள் கட்சியில் பஞ்சமில்லை. ஆனால் நான் உங்களுக்காக 5 ஆண்டும் பணியைத் தொடர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x