Published : 23 Sep 2021 09:23 PM
Last Updated : 23 Sep 2021 09:23 PM
அமெரிக்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் ஒரு பகுதியாக, குவால்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோனை இன்று சந்தித்தார்.
இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் மின்னணு துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து சந்திப்பின் போது இருவரும் விவாதித்தனர்.
மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புக்கு சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மற்றும் இந்திய செமி கண்டக்டர் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் விவாதித்தனர்.
அதேபோல், அடோபி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தனு நாராயணையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
இந்தியாவுடனான அடோபி நிறுவனத்தின் தற்போதைய கூட்டு மற்றும் எதிர்கால முதலீட்டு திட்டங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர். இந்தியாவின் முன்னணி திட்டமான டிஜிட்டல் இந்தியா மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.
மேலும், ஃபர்ஸ்ட் சோலார் தலைமை செயல் அதிகாரி மார்க் விட்மரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி சாத்தியக்கூறுகள் மற்றும் 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 450 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை எட்டுவதற்கான இந்தியாவின் இலக்கு குறித்து இருவரும் பேசினர்.
சமீபத்தில் தொடங்கப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் பிரத்யேக மெல்லிய சுருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் தயாரிப்பு வசதிகளை நிறுவுவது குறித்தும் சர்வதேச விநியோக சங்கிலிகளில் இந்தியாவை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த சந்திப்புகள் அனைத்துமே ஆக்கபூர்வமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்:
குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் நாளை (செப். 24-ம் தேதி ) மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT