Published : 06 Feb 2016 12:27 PM
Last Updated : 06 Feb 2016 12:27 PM
76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை பலமடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஹீமோஃபீலியா (Haemophilia) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய அரசின் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
ஹீமோஃபீலியா என்பது ஒரு மரபணு நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அவற்றை கட்டுப்படுத்த இரண்டு முக்கிய மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டுமே இறக்குமதி செய்யப்படும் மருந்துகள். இந்நிலையில், மத்திய அரசு இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்தால் மருந்துகளின் விலை பல மடங்கு அதிகரிக்கும் என நோயாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஹீமோஃபீலியா சொசைட்டியைச் சேர்ந்த ரூபால் பஞ்சால் கூறும்போது, "ஓராண்டுக்கு எங்களுக்கு 1,500 முதல் 1,7000 யூனிட் மருந்து தேவைப்படுகிறது. இப்போதே நாங்கள் இந்த மருந்துகளுக்காக ரூ.30,000 செலவழிக்கிறோம். இந்நிலையில், மத்திய அரசு இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்தால் இந்த மருந்தின் ஒவ்வொரு யூனிட்டுக்கும் கூடுதலாக ரூ.4 வரை செலுத்த வேண்டியிருக்கும். இதனால் மொத்தமாக 1500 யூனிட் மருந்துகள் வாங்கும்போது பல ஆயிரம் ரூபாய் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்" என்றார்.
அதேவேளையில் ஹெச்.ஐ.வி, புற்றுநோய் போன்ற மருந்துகள் இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதால் இந்நோய்களுக்கான வெளிநாட்டு மருந்து மீதான வரிச் சலுகை ரத்து நோயாளிகளை பெருமளவில் பாதிக்காது எனக் கூறப்படுகிறது.
76 வகை மருந்துகளுக்கான இறக்குமதி வரிச் சலுகையை ரத்து செய்வது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி 28-ம் தேதியே வெளியிட்டிருக்கிறது. ஆனால், பயோகான் மருந்து நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா தனது ட்விட்டரில், "இறக்குமது வரிச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதால் புற்றுநோய் உள்ளிட்ட நோயாளிகளுக்கான உயிர்காக்கும் மருந்து 22% அதிகரிக்கக்கூடும்" என பதிவு செய்த பிறகே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT