Published : 22 Sep 2021 12:27 PM
Last Updated : 22 Sep 2021 12:27 PM
குவாட் அமைப்பின் மாநாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் ஆகியவற்றில் நேரடியாக பங்கேற்க பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு‘குவாட்’ கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கின. 2017-ம்ஆண்டு இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா இணைந்தது.
குவாட் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் முதல் உச்சி மாநாடு அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் வரும் 24-ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
குவாட் மாநாட்டில் கரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். முக்கியமான ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து முக்கிய விவாதம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலிபான்கள் ஆப்கனை கைபற்றிய பிறகு அங்கு ஏற்பட்டுள்ள நிலவரம், அதனால் சர்வதேச அளவில் ஏற்படும் தாக்கம் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி 25-ம் தேதி ஐ.நா.பொதுசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
#WATCH | PM Narendra Modi departs from New Delhi for a 3-day visit to US to attend the first in-person Quad Leaders’ Summit, hold bilateral meetings, and address United Nations General Assembly pic.twitter.com/hxNeQEKMH1
— ANI (@ANI) September 22, 2021
இந்த இரு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் இருந்து காலை 11 மணியளவில் பிரதமர் மோடியின் விமானம் புறப்பட்டது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு அவர் வாஷிங்டனை சென்றடைவார்.
மேலும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிட் சுகா ஆகியோரையும் சந்திக்கிறார். இருநாட்டு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து குவாட் உச்சிமாநாட்டிற்கு முன்பு பிரதமர் மோடி விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT