Published : 22 Sep 2021 11:51 AM
Last Updated : 22 Sep 2021 11:51 AM
டெல்லியில் அசாதுதீன் ஒவைசி வீடு தாக்கப்பட்டது தொடர்பாக இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா பொறுப்பேற்றதை
அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி அசோகா சாலையில் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் அதிகாரபூர்வ வீடு அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) அடித்து நொறுக்கப்பட்டது. இதில் யாரும் தாக்கப்படவோ காயப்படுத்தப்படவோ இல்லை. இத் தாக்குதல் சம்பவத்திற்கு இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா பொறுப்பேற்றுள்ளார்.
தாக்குதல் சம்பவம் குறித்து மாலை 5 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து போலீஸார் அவ்விடத்திற்கு விரைந்து சென்றதாக துணை போலீஸ் கமிஷனர் தீபக் யாதவ் கூறினார்.
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒவைசியின் அதிகாரபூர்வ வீட்டின் பின்பக்க வாயில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் தாக்கப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்றாலும், பொது சொத்துக்கள் சேதமடைந்துள்ளன என்பதால் இது ஒரு குற்றச்செயல் ஆகும். இது தொடர்பாக வடக்கு டெல்லியைச் சேர்ந்த இந்து சேனா உறுப்பினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
பாடம் கற்பிக்க நடத்திய தாக்குதல்: இந்து சேனா
சமூக ஊடகங்களில் அசாதுதீன் வீடு அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் தோன்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்துசேனாவின் மாநில தலைவர் லலித் குமார், ஒவைசியின் பொதுக்கூட்டங்களில் இந்துக்களுக்கு எதிராகப் பேசுவதால் அவருக்கு பாடம் கற்பிக்க அவரது இல்லத்திற்குச் சென்றதாகக் கூறினார்.
இந்து சேனாவின் தலைவர் விஷ்ணு குப்தா பேசும் மற்றொரு வீடியோவில், ''ஹைதராபாத் எம்.பி. "இந்துக்களுக்கு விரோதமான
கருத்துக்களை அவ்வப்போது பேசிவருகிறார் ஓவைசி தொடர்ந்து இந்து விரோத அறிக்கைகளை அளித்து தலைப்புச் செய்தியாக இருக்கிறார், அவருக்கு எதிராக ஏற்கெனவே உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் இந்துவிரோத நடவடிக்கைகளால் எங்கள் மனம் புண்பட்டுள்ளது. அவர் இனி இது போன்ற அறிக்கைகளை கொடுக்க வேண்டாம்'' என்று ஓவைசியிடம் இந்து சேனா கேட்டுக் கொள்கிறது.''
இவ்வாறு விஷ்ணு குப்தா தெரிவித்துள்ளார்.
ஒவைசி கண்டனம்
இச்சம்பவம் குறித்து அசாதுதீன் ஒவைசி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒவைசி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
"தேர்தல் கமிஷன் தலைமையகம் என் வீட்டிற்கு அடுத்தபடியாக உள்ளது, நாடாளுமன்ற தெரு காவல் நிலையம் என் வீட்டின் குறுக்கே உள்ளது. பிரதமரின் குடியிருப்பு 8 நிமிட தூரத்தில் உள்ளது. ஆனால் இங்கு ஒரு எம்.பி.யின் வீடு பாதுகாப்பாக இல்லை என்றால், அமித் ஷா இதற்கு என்ன பதில் சொல்கிறார். இதற்கு பாஜகதான் பொறுப்பேற்க வேண்டும்.
தீவிரவாதத்தை நாம் எப்படி எதிர்த்துப் போராட வேண்டும் என்பதை உலகிற்கு பிரதமர் போதிக்கிறார், தயவுசெய்து இந்த குண்டர்களை யார் தீவிரவாதிகளாக்கினார்கள் என்று சொல்லுங்கள்? இந்த குண்டர்கள் என்னை பயமுறுத்துவதற்காக இப்படி செய்வதாக நினைத்தால், அவர்களுக்கு மஸ்ஜிலிஸ் என்றால் என்ன, நாங்கள் யார், எப்படிப்பட்டவர்கள் என்று அவர்களுக்கு தெரியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டோம். அதேநேரம் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் ஒருபோதும் நிறுத்த மாட்டோம்"
இவ்வாறு ஒவைசி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT