Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

தெலங்கானாவில் முதுகலை படித்த பெண் துப்புரவு தொழிலாளிக்கு தகுதிக்கு ஏற்ப பணி ஆணை வழங்கிய அமைச்சர்

ரஜனிக்கு பணி உத்தரவு ஆணையை வழங்கி கை குலுக்கி பாராட்டும் அமைச்சர் கே.டி. ராமாராவ்.

ஹைதராபாத்

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஜனி. இவரது குடும்பம் ஒரு விவசாய குடும்பமாகும். பொருளாதார ரீதியாக இவர்கள் பாதிக்கப்பட்டு வந்தாலும், கல்வியை இவர் கைவிடவில்லை. பெற்றோர் இவரை எம்.எஸ்சி கரிம வேதியியல் (ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) வரை படிக்க வைத்தனர்.

இவர் கடந்த 2013-ம் ஆண்டில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மேலும் இவர் ஹைதராபாத் சென்ட்ரல் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி படித்து தேர்ச்சி அடைந்துள்ளார். இதனிடையே இவர்வழக்கறிஞர் ஒருவரை திருமணம்செய்துகொண்டு, ஹைதராபாத் துக்கு குடியேறினார். இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவருக்கு இதய நோய் வந்ததால், இவர் மீது குடும்ப பாரம் விழுந்தது.

படுத்த படுக்கையில் இருக்கும் கணவர், தனது 2 மகள்கள் மற்றும் மாமியார் ஆகியோரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ரஜனி தள்ளப்பட்டார். இவர் பல இடங்களில் வேலை தேடினார் ஆனால், இவரது படிப்புக்கு ஏற்ற வேலை ஏதும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் தள்ளு வண்டியில் காய்கறிகளை விற்று குடும்பத்தை காப்பாற்றினார். அதன் பின்னர், ஹைதராபாத் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில், துப்புரவு தொழிலாளியாக பணியில் சேர்ந்தார். தனது படிப்புக்கும், செய்யும் தொழிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாவிட்டாலும், குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படக் கூடாதுஎனும் ஒரே நோக்கில் தான் மட்டுமே கஷ்டப்பட முடிவு செய்தார்.

இதுறித்து தெலுங்கு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தகவல்கள் பரவ தொடங்கின. இது குறித்து, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், நகராட்சி வளர்ச்சி துறையின் அமைச்சருமான கே.டி. ராமாராவின் காதுகளுக்கு எட்டியது.

உடனடியாக நகர வளர்ச்சித் துறையின் தலைமை செயலாளர் அர்விந்த் குமார் மூலமாக ரஜனி, அமைச்சர் கே.டி ராமாராவை சந்தித்தார். பின்னர், அவரது குடும்ப விவரங்களை அமைச்சர் கேட்டறிந்தார். அதன் பின்னர், உதவி பூச்சியியலாளராக (Assistant Entomologist) பணி உத்தரவை வழங்கினார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத ரஜனி, கண்ணீர் மல்க அமைச்சர் கே.டி. ராமாராவுக்கும் நன்றியை தெரிவித்தார். ரஜனிக்கு உதவியஅமைச்சருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x