Published : 20 Sep 2021 05:42 PM
Last Updated : 20 Sep 2021 05:42 PM

மீண்டும் அனுமதி: அடுத்த மாதம் முதல் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி; மத்திய அரசு முடிவு 

புதுடெல்லி 

இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கரோனா தடுப்பூசியை அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் மருந்து நிறுவனமும், கோவேக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன.

இதில், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனிக்கா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு ஆகும். உள்நாட்டு தேவை போக, உபரியாக இருக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கும் சீரம் நிறுவனம் ஏற்றுமதி செய்து வந்தது. பொருளாதாரத்தில் நலிவடைந்த 64 நாடுகளுக்கு இந்த மருந்துகளை இந்தியா அனுப்பியது.

இந்தியாவில் மார்ச் மாதம் கரோனா 2-வது அலை தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் கரோனா 2-வது அலை கோரத் தாண்டவம் ஆடியதால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை அரசு முடுக்கிவிட்டது.

கரோனா பரவல் அதிகரிப்பதால் இந்தியாவுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் கணிசமாக தேவைப்படும் என்பதால் கரோனா தடுப்பு மருந்தின் ஏற்றுமதியை ஏப்ரல் மாதத்தில் இந்தியா முற்றிலுமாக நிறுத்தியது.

இந்தநிலையில் இந்தியாவில் பயன்படுத்தியது போக மீதமுள்ள கரோனா தடுப்பூசியை அடுத்த மாதம் முதல் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் பங்கேற்கும் குவாட் நாடுகளின் உச்சிமாநாட்டில் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக கரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்துள்ளார். டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் 94.4 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த அரசு விரும்புகிறது, இதுவரை இந்த வயது பிரிவினரில் 61 சதவிகிதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x