Published : 20 Sep 2021 04:29 PM
Last Updated : 20 Sep 2021 04:29 PM
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
தொண்டு நிறுவனமான இவாரா அறக்கட்டளை சார்பில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் பங்கஜ் சின்ஹா ஆஜரானார்.
அந்த மனுவில் கூறுகையில், “இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கூறுகையில், வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தால்தான் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும் எனத் தெரிவித்தது. கேரளா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் இந்த முயற்சியை முன்னெடுத்தன. அதேபோல மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் வீடு தேடித் சென்று தடுப்பூசி செலுத்துவதைச் சாத்தியமாக்க வேண்டும், அவர்களுக்கு மட்டும் உதவும் வகையில் கோவின் தளத்தில் உதவி எண்கள் வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தைக் கடைப்பிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு, சொலிசிட்டர் ஜெனரலிடம், “மாற்றுத்திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்த தனியாக மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள், ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திட்டமிடல்கள் என்ன என்பது குறித்து இரு வாரங்களில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT