Published : 20 Sep 2021 02:36 PM
Last Updated : 20 Sep 2021 02:36 PM

‘‘நானும் ஆம் ஆத்மி தான்’’- பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் 

சண்டிகர் 

பஞ்சாபில் சில கட்சிகள் ஆம் ஆத்மி பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் நானும் ஆம் ஆத்மி தான் என புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைமை உத்தரவையேற்று அமரீந்தர் சிங் பதவியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர், மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அமரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்தவர் சரண்ஜித். தலித் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி, ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரை புதிய அரசு அமைக்குமாறு பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

அதன்படி, இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் ரந்தவா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்கள் துணை முதல்வராக பதவி வகிப்பர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இங்கு அமர்ந்து சில கட்சிகள் ஆம் ஆத்மி (சாதாரண மக்கள்) பற்றி பேசிக்கொண்டே இருக்கின்றன. நானும் ஆம் ஆத்மி தான். இது ஆம் ஆத்மி அரசு.

நான் சாதாரண மனிதர், விவசாயி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிரதிநிதி. நான் பணக்காரர்களின் பிரதிநிதி அல்ல. என் தந்தை குடிசை அமைக்கும் தொழில் செய்து வந்தார்.

பஞ்சாபிற்கு இந்த மாற்றம் நல்ல நன்மைகளை கொடுக்கும். மணல் அள்ளுபவர்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் என்னிடம் வர வேண்டாம். நான் உங்கள் பிரதிநிதி அல்ல. நான் ஏழை மக்களின் பிரதிநிதி.

ஏழைகளுக்கு தண்ணீர் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிநபர்களை விடவும் கட்சி மிக உயர்ந்தது. கட்சி முடிவுகளை எடுக்கும், அரசு அவற்றை செயல்படுத்தும். அது கட்சிக்கு நன்மை கொடுக்கும் என்றால் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x