Published : 20 Sep 2021 02:43 PM
Last Updated : 20 Sep 2021 02:43 PM

நாள்தோறும் 328 பேர் பலி; இந்தியாவில் 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழப்பு: என்சிஆர்பி தகவல்

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

இந்தியாவில் சாலை விபத்துகளில் நாள்தோறும் சராசரியாக 328 பேர் பலியாகின்றனர். கரோனா பரவலால் 2020-ம் ஆண்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவிக்கிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட (என்சிஆர்பி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் இருந்தபோதிலும்கூட சாலை விபத்துகளில் 1.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், சராசரியாக நாள்தோறும் 328 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3.92 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2019-ம் ஆண்டில் 1.36 லட்சம் பேரும், 2018-ம் ஆண்டில் 1.35 லட்சம் பேரும் உயிரிழந்தனர்.

ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் (ஹிட் அண்ட் ரன்) தப்பிச் சென்ற வகையில் கடந்த 2018-ம் ஆண்டில் 1.35 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020-ம் ஆண்டில் மட்டும் இதேபோன்று 41,196 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் 47,504 வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 47,028 வழக்குகளும் பதிவாகின.

மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் செல்லும் சம்பவம் மட்டும் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 112 நடக்கின்றன. 2020-ம் ஆண்டில் மட்டும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி விபத்து ஏற்படுத்திய வகையில் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

ரயில் விபத்துகள்

கடந்த 2020-ம் ஆண்டில் நாடு முழுவதும் ரயில் விபத்துகள் மூலம் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 55 பேரும், 2018-ம் ஆண்டில் 35 பேரும் உயிரிழந்தனர்.

2020-ம் ஆண்டில் மருத்துவக் கவனக்குறைவால் உயிரிழந்தது தொடர்பாக 133 வழக்குகள் இந்தியாவில் பதிவாகின. இதில் 2019-ம் ஆண்டில் 201 வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 218 வழக்குகளும் பதிவாகின.

அரசு அமைப்புகளின் கவனக்குறைவால் மக்கள் உயிரிழந்தது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டில் 51 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் 147 வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 40 வழக்குளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மற்ற கவனக்குறைவு காரணமாக 2020-ம் ஆண்டில் 6,367 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் 7,912 வழக்குகளும், 2018-ம் ஆண்டில் 8,687 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x