Published : 18 Sep 2021 06:59 AM
Last Updated : 18 Sep 2021 06:59 AM
பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளான நேற்று உலகளவில் ஒரேநாளில் 2.50 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா உலக சாதனை படைத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பெருமிதம் அடைந்துள்ளார்.
2.50 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, ஆனால், இறுதியான தகவலை இன்று காலை மத்திய அரசு வெளியிடும் என்பதால் 2.50க்கோடிக்கும் அதிகமாகவே இருக்கும். நள்ளிரவு 12 மணிக்குக்கு கோவின் தளத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 79.33 கோடியைக் கடந்துவிட்டது.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளான நேற்று கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய சாதனை படைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதன்படி, நேற்று காலை முதலே தடுப்பூசி செலுத்துவதில் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்த அதிகமான முகாம்கள் நாடுமுழுவதும் அமைக்கப்பட்டன.
இதற்கு முன் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும், உலகளவில் சீனா ஒரே நாளில் கடந்த ஜூன் மாதம் 2.47 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனையாக வைத்திருந்தது. அதை முறியடிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதன்படி,தடுப்பூசி செலுத்துதல் நேற்று வேகமெடுத்து, நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி ஒரு கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாலை 2 கோடியைக் கடந்துவிட்டதாக மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “வாழ்த்துகள் இந்தியா! பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று இந்தியா தடுப்பூசி செலுத்துவதில் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. ஒரேநாளில் 2.50 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு வரலாறு படைத்து, உலகளவில் சாதனை நிகழ்த்தியுள்ளது” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தடுப்பூசி செலுத்தியதில் வரலாற்று சாதனை நிகழ்த்தியதற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுங்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், துணையாக இருந்தவர்கள், நிர்வாகிகள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் அனைவரும் இந்த தடுப்பூசி சாதனை வெற்றிகரமாக்க காரணமானவர்கள். தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்தி கரோனாவைத் தோற்கடிப்போம்” எனத் தெரிவித்தார்.
மாநிலங்களில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 26.9 லட்சம், அதைத் தொடர்ந்து பிஹாரில் 26.60 லட்சம், உ.பியில் 24.80 லட்சம், மத்தியப்பிரதேசத்தில் 23.7 லட்சம் , குஜராத்தில் 20.40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
ஐரோப்பாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை விட இந்தியா செலுத்திய தடுப்பூசி எண்ணிக்கை அதிகம் என மத்திய அரசு தெரிவி்த்துள்ளது. அதாவது மணிக்கு 17 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும், நிமிடத்துக்கு 28ஆயிரம் டோஸ்களும், வினாடிக்கு 466 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.
தினசரி கரோனா தடுப்பூசி செலுத்துவதில் கடந்த ஆகஸ்ட்31, 27 மற்றும் செப்டம்பர் 6ம் தேதிகளில் ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்ட நிலையில் ேநற்று 4-வது முறையாக கடந்தது. தடுப்பூசி செலுத்தியதில் சாதனை படைத்த இந்தியாவின் முயற்சியை உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் 10 கோடி எண்ணிக்கையை எட்ட 85 நாட்களும், அதிலிருந்து 45 நாட்களில் 20 கோடி எட்டப்பட்டது. அடுத்த 29 நாட்களில் 30 கோடியும், அடுத்த 24 நாட்களில் 40 கோடியும், அடுத்த 29 நாட்களில் 50 கோடியும் எட்டப்பட்டது. 60 கோடியை எட்ட அடுத்த 19 நாட்களும் எடுத்தக்கொண்ட நிலையில் 70 கோடி தடுப்பூசிகள் அடுத்த 13 நாட்களிலும் எட்டப்பட்டது. அடுத்த 5 கோடி தடுப்பூசிகள் என 75 கோடி தடுப்பூசிகள் கடந்த 13ம் தேதி எட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT