Last Updated : 23 Feb, 2016 07:49 AM

 

Published : 23 Feb 2016 07:49 AM
Last Updated : 23 Feb 2016 07:49 AM

நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று தொடக்கம்: இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் உரையாற்றுகிறார்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் வரும் 25-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 29-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் முதல் பகுதி மார்ச் 16-ம் தேதி முடிகிறது. அதன்பின் 2-ம் கட்ட கூட்டம் ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விவாதிக்க அரசு தயார்

இந்நிலையில் அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு கோரி, அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை மத்திய அரசு நேற்று கூட்டியது. இக்கூட்டத்துக்குப் பிறகு, இதற்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால் பிரச்சினைகளும் ஏராளமாக உள்ளன. இதுகுறித்து விவாதித்து தீர்வு காண்பதற்குதான் நாடாளுமன்றம் இருக்கிறது. ஜேஎன்யூ, ரோஹித் தற்கொலை, ஜாட் இடஒதுக்கீடு போராட்டம் உட்பட எந்த பிரச்சினை குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் ஆகிய 2 முக்கிய மசோதாக்களை நிறை வேற்ற வேண்டி உள்ளது. இதுகுறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.

எனவே கூட்டத்தொடரின்போது எதிர்க் கட்சிகள் சாதகமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கவலைப்படும் அனைத்து விவகாரங் களிலும் அரசுக்கும் அக்கறை உள்ளது. அதேநேரம் இந்த கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஒத்துழைக்கும்

அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்) செய்தியாளர்களிடம் கூறும்போது, “பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதியான மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு அளிக்கும்” என்றார்.

இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x