Published : 17 Sep 2021 01:59 PM
Last Updated : 17 Sep 2021 01:59 PM
காங்கிரஸ் கட்சிக்குப் புதுரத்தம் பாய்ச்ச முயற்சி எடுத்துவரும் ராகுல் காந்தியால், சிபிஐ தலைவர் கன்னையா குமார், குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோரை காங்கிரஸ் கட்சியில் விரைவில் இணைவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் சிபிஐ தலைவர் கன்னையா குமார், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியைச் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிஹார் அரசியலிலும், தேசிய அரசியலிலும் கன்னையா குமார் முக்கியப் பங்கு வகிப்பதால் அவரை இணைக்க காங்கிரஸ் முயற்சி எடுத்து வருகிறது.
இதற்கு முன் பலமுறை ராகுல் காந்தியுடன் கன்னையா குமார் சந்தித்திருந்தாலும், சமீபத்திய சந்திப்பு இருவருக்கும் இடையே முக்கியத்துவம் பெறுகிறது. காங்கிரஸ் கட்சியில் கன்னையா குமாருக்கு என்னமாதிரியான பதவி அளிக்கலாம் என்ற பேச்சும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், “சிபிஐ கட்சியில் கன்னையா குமார் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும், ஓரம் கட்டப்பட்டதாகவும் உணர்கிறார். ஆதலால், காங்கிரஸில் இணைவது குறித்து ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிஹாரில் செல்வாக்குடன் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியான சிபிஐ, ஆர்ஜேடி கட்சிகளைவிடக் குறைந்த தொகுதிகளில்தான் வென்றது. ஆதலால் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியாக கன்னையா வருகை இருக்கலாம்” எனத் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகப் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில் இளம் தலைவர்கள் ஜின்பிரசாதா, பிரியங்கா சதுர்வேதி, சுஷ்மிதா தேவ் போன்றோர் வெளியேறிவிட்டனர்.
இதனால், பிரச்சாரத்துக்கு வலுவான இளம் தலைவர்கள், இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பேசக்கூடியவர்கள் தேவை என்பதால், கன்னையா குமாருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் கட்சியில் இளம் தலைவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் வழங்க ராகுல் காந்தி விரும்புகிறார் அதன் காரணமாகவே கன்னையா குமார் இணைவு இருக்கலாம் எனத் தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகவும் மேவானியுடன் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பேசி வருவதாகத் தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் மேவானியின் வெற்றி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, அவருக்கு எதிராக வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT