Published : 17 Sep 2021 12:20 PM
Last Updated : 17 Sep 2021 12:20 PM
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடியது. கடந்த 20 மாதங்களில் முதல்முறையாக மாநில நிதிஅமைச்சர்கள் நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கடைசியாக 2019-ம் ஆண்டு, டிசம்பர் 18-ம் தேதி நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடியது. அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின்பு இப்போது நேரடியாக கூடியுள்ளது
கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது, 1-2க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசுகளின் வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஆனால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவராமல் விலக்கு அளிக்கப்பட்டன. மேலும், மத்திய அரசு, மாநில அரசுகளின் வருவாயைக் கணக்கில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த விலக்கால், பெட்ரோல், டீசல் மீது தொடர்ந்து உற்பத்தி வரியை மத்திய அரசு விதித்து உயர்த்தி வருகிறது, மாநில அரசுகள் வாட் வரி விதித்து மக்கள் மீது சுமையை ஏற்றி வருகின்றன. இதனால், பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரும் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது.
இந்தநிலையில் இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை சரக்கு, சேவை வரிநடைமுறையின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
அதுபோலவே ஓட்டல் உணவுகளை வீடுகளுக்கு சென்று சப்ளை செய்யும் ஸ்விக்கி, ஸோமேட்டோ போன்ற நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
இதனைத் தவிர வரி நிலுவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இன்றையக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. பல்வேறு மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT