Published : 15 Sep 2021 05:40 PM
Last Updated : 15 Sep 2021 05:40 PM
இந்தியாவில் தினசரி சராசரியாக 80 கொலை வழக்குகள் 2020-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 29 ஆயிரத்து 193 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக கொலை வழக்கு உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''கடந்த 2020-ம் ஆண்டில் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓராண்டில் மட்டும் 29 ஆயிரத்து 193 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அதிகமாகும், கடந்த 2019-ம் ஆண்டில் 28 ஆயிரத்து 915 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தினசரி 79 கொலை வழக்குகள் பதிவாகின.
2020-ம் ஆண்டில் கடத்தல் வழக்குகள் 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 19 சதவீதம் குறைந்துள்ளன. 2020-ம் ஆண்டில் 84 ஆயிரத்து 805 கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில், 2019-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 36 வழக்குகள் பதிவாகின.
உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2020-ம் ஆண்டில் 3,779 கொலை வழக்குகள் பதிவாகின. அதைத் தொடர்ந்து பிஹாரில் 3,150, மகாராஷ்டிராவில் 2,163, மத்தியப் பிரதேசத்தில் 2,101, மேற்கு வங்கத்தில் 1,948 கொலை வழக்குகள் பதிவாகின. டெல்லியில் 472 கொலை வழக்குகள் பதிவாகின.
கொலை வழக்கில் கொல்லப்பட்டவர்களில் 38.5 சதவீதம் பேர் 30 முதல் 45 வயதுள்ளவர்கள். 35.9 சதவீதம் பேர் 18 முதல் 30 வயதுள்ளவர்கள். 16.4 சதவீதம் பேர் 45 முதல் 60 வயதுடையவர்கள். 4 சதவீதம் பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்.
கடந்த 2020-ம் ஆண்டில் 12 ஆயிரத்து 913 கடத்தல் வழக்குகள் உ.பி.யில் பதிவாகின. அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 9,309, மகாராஷ்டிராவில் 8,103, பிஹாரில் 7,889, மத்தியப் பிரதேசத்தில் 7,320 வழக்குகள் பதிவாகின. டெல்லியில் 4,602 வழக்குகள் பதிவாகின.
கடந்த ஆண்டில் 84,805 கடத்தல் வழக்கில் 88 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 56,591 பேர் குழந்தைகள். மற்றவர்கள் வயதுவந்தோர் பிரிவைச் சேர்ந்தவர்கள்''.
இவ்வாறு என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT