Published : 15 Sep 2021 05:44 PM
Last Updated : 15 Sep 2021 05:44 PM
மத்திய அரசு 'இந்தி மொழி நாள்' கொண்டாடுவதைக் கண்டித்தும், இந்தித் திணிப்பைக் கண்டித்தும் கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு செப்டம்பர் 14 -ம் தேதியை 'இந்தி மொழி நாள்' ( இந்தி திவாஸ்) என அறிவித்து, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.
இந்நிலையில் கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி, ஷிமோகா உள்ளிட்ட இடங்களில் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பினர் இந்தி மொழி நாளைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் மைசூரு வங்கி சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற கன்னட அமைப்பினர் இந்தித் திணிப்புக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் இந்தி எழுத்துகள் அடங்கிய பதாகைகளைத் தீயிலிட்டு எரித்தனர்.
அப்போது கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா பேசும்போது, ''மத்திய அரசு அறிவித்துள்ள இந்தி மொழி நாள் கன்னடர்களுக்குக் கறுப்பு நாள் ஆகும். கர்நாடகாவில் எல்லாத் தளங்களிலும் மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. மத்திய அரசின் அலுவலகங்கள், வங்கிகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் கன்னட மொழியில் சேவை வழங்கப்படுவதில்லை.
மத்திய அரசின் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத அனுமதிக்கிறார்கள். வங்கிகளில் கன்னடத்தில் சேவை வழங்கப்படாததால், கிராமப்புறங்களில் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கன்னடத்தில் சேவையை வழங்கக் கோரி இந்த ஆண்டு முழுவதும் வங்கிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவுள்ளோம்'' என்றார்.
கன்னட அமைப்பினரின் இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பல மொழிகள் பேசும் இந்தியாவில், இந்திக்கு மட்டும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பது ஏன்? மத்திய அரசின் இந்தித் திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தித் திணிப்பை எதிர்க்கும் அதே வேளையில், கன்னட மொழியின் உரிமையைப் பாதுகாப்பதிலும் மஜத முன்னணியில் இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT