Published : 15 Sep 2021 03:33 PM
Last Updated : 15 Sep 2021 03:33 PM
நாடு முழுவதும் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு உரிய நீதிபதிகளை அடுத்த 2 வாரங்களுக்குள் மத்திய அரசு நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்கும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
ஏராளமான காலியிடங்கள் இருக்கும்போது, மத்திய அரசு தங்களுக்குத் தேவையான சிறந்த நபர்களை மட்டும் தீர்ப்பாயங்களுக்கு நியமிக்கிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
நாடு முழுவதும் தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் 250-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்தத் தீர்ப்பாயங்களில் நீதிபதிகளை நியமிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக தீர்ப்பாயங்களுக்கு விரைவாக நீதிபதிகளை நியமிக்கக் கோரியும், அதற்கான தேர்வுக் குழுவை அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஆனால், தீர்ப்பாயங்கள், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களுக்கு உரிய நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் ஆஜரானார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தது. அதில், “தீர்ப்பாயங்களிலும், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களிலும் உரிய காலியிடங்களை நிரப்ப பலமுறை மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மனுதாரர்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய வகையில் வழக்கின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். வழக்குகள் மாதக் கணக்கில் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீதிபதிகள் காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால் மனுதார்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று எங்கு நீதிபதிகள் இருக்கிறார்களோ அங்கு வழக்கை விசாரிக்கக் கோரும் நிலை இருக்கிறது.
தீர்ப்பாயங்களின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேர்வுக்குழு பெயர்களைப் பரிந்துரை செய்தால் அதில் சிறந்தவர்களைத் தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் மத்திய அரசு தேர்வு செய்துவிட்டு மற்றவர்களைக் காத்திருப்பில் வைத்துள்ளது. தேசிய கம்பெனி சட்டம் தீர்ப்பாயத்தின் நீதிபதிக்கு தேர்வுக் குழு உறுப்பினர்கள் வழங்கிய பட்டியலைப் பார்த்தேன்.
10 தொழில்நுட்ப உறுப்பினர்கள், 9 நீதித்துறையைச் சேர்ந்தவர்களைத் தேர்வுக் குழுவினர் பரிந்துரைத்தனர். ஆனால், மத்திய அரசு, பெயர்ப் பட்டியலில் இருந்து 3 பேரை மட்டும் தேர்வு செய்து, மற்றவர்களைக் காத்திருப்பில் வைத்தது. சட்டத்துறையில் தேர்வுக்குழுப் பட்டியலை புறக்கணிக்கவும், காத்திருப்பில் வைக்கவும் முடியாது. எந்த அடிப்படையில் மத்திய அரசு நியமிக்கிறது” என அட்டர்னி ஜெனரலிடம் நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியது.
அதற்கு அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பதில் அளிக்கையில், “யாரோ ஒருவரை தீர்ப்பாயத்துக்குத் தேர்வு செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை” என்றார். அதற்கு தலைமை நீதிபதி ரமணா, “சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். நியமனத்துக்கு உறுதியளிக்காவிட்டால் எதற்காக நீங்கள் தேர்வுக்குழு அமைக்கிறீர்கள்” எனக் கேட்டார்.
நீதிபதி நாகேஸ்வரராவ், “தேர்வுக் குழுவின் தேடல் மற்றும் தேர்வு முறையின் புனிதம்தான் என்ன? தேர்வுக்குழு உரிய நபர்களைத் தேர்வு செய்ய விரிவான பணிகளைச் செய்கிறது” என்று தெரிவித்தார்.
நீதிபதி சந்திரசூட் கூறுகையில், “கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் தலைமைப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. ஒரு வங்கி கடன் செலுத்தாத வாடிக்கையாளரின் வீட்டையோ அல்லது தொழிற்சாலையையோ ஜப்தி செய்ய முயன்றால், தீர்ப்பாயத்தில் உத்தரவு பிறப்பிக்க யாருமில்லை. உயர் நீதிமன்றம் இதுபோன்ற வழக்கை விசாரிக்க மறுக்கிறது. நீதி கிடைக்க வழியில்லை” எனத் தெரிவித்தார்.
நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டு நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி தீர்ப்பாயங்களுக்குத் தலைமைப் பதவிக்கு ஆட்களைத் தேர்வு செய்து பட்டியலிட்டும் அதை நிரப்பாமல் மத்திய அரசு இருக்கிறது. இதனால் எங்களுக்குத்தான் நேரம் வீணாகியுள்ளது.
ஆதலால், அடுத்த 2 வாரங்களுக்குள் நாடு முழுவதும் காலியாக இருக்கும் தீர்ப்பாயங்களுக்கு நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும்” என கெடு விதித்தனர்.
அதற்கு அட்டர்னி ஜெனரல் அளித்த பதிலில், அடுத்த இரு வாரங்களில் தீர்ப்பாயத்துக்கு உரிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT