Published : 15 Sep 2021 02:26 PM
Last Updated : 15 Sep 2021 02:26 PM
2024-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி தேசிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டத்துக்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும், அவர் தலைமையில் இந்தப் போராட்டம் நடக்க வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அமைத்த குழுவில் உள்ள மூத்த தலைவர்கள், இந்தப் போராட்டம் குறித்தும், போராட்டத்தில் எந்த மாதிரியான விஷயங்களை முன்வைக்கலாம் என்றும் ஆலோசித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, எந்தெந்த விவகாரங்களை, விஷயங்களை அடிப்படையாக வைத்துப் போராட்டம் நடத்தலாம் என்பதற்கான திட்டங்களைத் தயாரித்து சோனியா காந்தியின் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள்.
காங்கிரஸ் தலைவர்கள் ரிபுன் போரா, உதித் ராஜ் ஆகியோர் போராட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும், காங்கிரஸ் தலைவராகப் பதவி ஏற்க வேண்டும், அப்போதுதான் நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டம் வெற்றியடையும் என வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக அமைப்புகள், சிவில் உரிமைக் குழுக்கள் ஆகியவற்றையும் இந்தப் போராட்டத்தில் இணைத்தால்தான் வெற்றியடையச் செய்ய முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் ஆலோசனை தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட விவகாரங்கள் போராட்டத்துக்கு முக்கியப் பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள குருதுவாரா ராகப் கஞ்ச் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வார்ரூமில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்றுள்ளார்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டதையும் போராட்டத்தில் முக்கிய விவகாரமாக எடுக்க வேண்டும் என பிரியங்கா காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT