Published : 15 Sep 2021 01:30 PM
Last Updated : 15 Sep 2021 01:30 PM
நாட்டின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் திட்டத்தை முறியடித்த டெல்லி போலீஸார், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் உள்பட 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ராம்லீலா உள்ளிட்டபண்டிகைகளின் போது வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த தீவிரவாதிகளின் திட்டத்துக்கு பாகிஸ்தான் தீவிரவாதி தாவுத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் மூளையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டெல்லி சிறப்பு போலீஸ் ஆணையர் நீரஜ் குமார் தாக்கூர், துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாலா நிருபர்களுக்கு நேற்றுப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
இந்தியாவின் டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முக்கிய நகரங்களில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ராம்லீலா ஆகிய பண்டிகைகளின் போது மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக உளவுத்துறையினர், டெல்லி போலீஸார் விசாரணை நடத்தியதில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, ஒரே நேரத்தில் டெல்லி, உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் டெல்லி சிறப்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை (நேற்று) திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பில் பயிற்சி பெற்ற 2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் விவரம் ஜான் முகமது ஷேக்(47), ஒசாமா(22), மூல்சந்த்(47), ஜீஸன் உமர்(28), முகமது அபுபக்கர்(23), முகமது அமீர் ஜாவித்(31)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒசாமா, உமர் இருவரும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், பயிற்சியை முடித்து இந்த ஆண்டுதான் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் ஐஎஸ்ஐ அமைப்பின் கட்டளைப்படி செயல்பட்டு வந்தனர். டெல்லியின் பல்வேறு பகுதிகள், உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் சக்தி வாய்ந்த ஐஈடி வெடிமருந்துகளை வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் தொடர்பு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விரிந்திருக்கிறது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் பல நகரங்களில் போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் முதலவாதக ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் ஷேக் என்பவர் கைது செய்யப்பட்டார். ரயிலில் டெல்லிக்கு பயணம் செய்தபோது போலீஸாரால் ஷேக் கைது செய்யப்பட்டார்.
அதன்பின் டெல்லியில் ஒசாமாவும், டெல்லியின் சாரே காலேகான் பகுதியிலிருந்து பக்கரும், அலகபாத் நகரில் உமரும் கைது செய்யப்பட்டனர். லக்னோவில் ஜாவித்தும், ரேபரேலி நகரில் மூல்சந்த்தும் தீவிரவாத தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரில் இருவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள். தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம் தாக்குதல் நடத்த மூளையாக இருந்துள்ளார்.
அலகாபாத், உள்ளிட்ட பல்வேறு நகரிலிருந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிபொருட்கள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. கைதான 6 பேரும் தனித்தனியாக தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதில் தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸுடன் நெருங்கிய தொடர்பில் சமீர் இருந்துள்ளார்.
விசாரணையில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி லக்னோவிலிருந்து சலாம் ஏர்லைன் மூலம் மஸ்கட்டுக்கு ஒசாமா சென்றுள்ளார். அங்கு உமரைச் சந்தித்தபின் ஒசாமாவும், உமரும் ஐஎஸ்ஐ அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளனர்.
மஸ்கட்டிலிருந்து விசா பெற்று பாகிஸ்தானுக்கு குவாதர் நகர் வழியாகச் சென்று, பாகிஸ்தான் தட்டா நகரில் தங்கியுள்ளனர். அங்கு ஒசாமா, உமர் இருவருக்கும் ஜாபர் மற்றும் ஹம்சா இருவரும் பயிற்சி அளித்துள்ளனர். 15 நாட்கள் நடந்த பயிற்சியில் வெடிகுண்டுகள் தயாரிப்பது, ஐஇடி வெடிகுண்டுகள் செய்வது போன்றவற்றை கற்றுக்கொண்டனர், துப்பாக்கிகளை கையாள்வது, ஏ.கே.47 உள்ளிட்ட நவீன துப்பாகிகளை கையாளும் பயிற்சியும் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மஸ்கட்டில் வங்கமொழி பேசும் வங்கத்தேசத்தனர் எனச் சந்தேகப்படும் 15 முதல் 16 பேர் ஐஎஸ்ஐ அமைப்பில் பயிற்சியில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து ஐஇடி வெடிபொருட்கள், கிரனேட், துப்பாக்கிகள், தோட்டாக்கள் போன்றவை பாதுகாப்பாக ரகசியமாக உத்தரப்பிரதேசத்துக்கு கடத்தப்பட்டுள்ளது. அதை ஷேக், மூல்சந்த் இருவரும் பெற்று பல்வேறு இடங்களுக்குச் சப்ளை செய்துள்ளனர்.
இவ்வாறு நீரஜ் குமார் தாக்கூர், துணை ஆணையர் பிரமோத் சிங் குஷ்வாலா தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT