Published : 15 Sep 2021 09:12 AM
Last Updated : 15 Sep 2021 09:12 AM
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 17-ம் தேதி கூட இருக்கும் நிலையில் அந்தக் கூட்டத்தில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை ஜிஎஸ்டி வரிவருவாய்க்குள் பெட்ரோல், டீசல் வந்தால் மத்திய அரசு, மாநில அரசுகள் தங்கள் வருவாயில் மிகப்பெரிய சமரசம் செய்ய வேண்டியிருக்கும். நாட்டில் பெட்ரோல் விலை லி்ட்டர் ரூ.100 கடந்துவிட்டது, டீசல் விலையும் ரூ.100 நெருங்குகிறது என்பதால், ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் வரும் வெள்ளிக்கிழமை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூடுகிறது. கடந்த 20 மாதங்களில் முதல்முறையாக மாநில நிதிஅமைச்சர்கள் நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். கடைசியாக 2019ம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடியது அதன்பின் இப்போது கூட உள்ளது
கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டபோது, 12க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசுகளின் வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஆனால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்கள் மட்டும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவராமல் விலக்கு அளிக்கப்பட்டன. மேலும், மத்திய அரசு, மாநில அரசுகளின் வருவாயைக் கணக்கில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த விலக்கால், பெட்ரோல், டீசல் மீது தொடர்ந்து உற்பத்தி வரியை மத்திய அரசு விதித்து உயர்த்தி வருகிறது, மாநில அரசுகள் வாட் வரி விதித்து மக்கள் மீது சுமையை ஏற்றி வருகின்றன. அதிலும் குறிப்பாக உற்பத்தி சீரான இடைவெளியில் மத்திய அரசால் உயர்த்தப்பட்டு வருகிறது.
வரிவீதம் குறையாத நிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கி, தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், ஏற்கெனவே விலை உயர்வில் இருக்கும் பெட்ரோல், டீசல் மேலும் விலை அதிகரித்து, பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயைக் கடந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரும் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது.
வெள்ளிக்கிழமை நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, அத்தியாவசியமான பொருட்கள். சிகிச்சைக்கான மருந்துப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவது குறித்து பேசப்படலாம். கடந்த ஜூன் 12ம் தேதி காணொலி மூலம் நடந்தஜிஎஸ்டி கவுன்சில் பல்வேறு பொருட்களுக்கு செப்டம்பர் 30ம் தேதிவரை வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இது மேலும் நீட்டிக்கப்படலாம்.
குறிப்பாக கரோனா மருந்துகளான ரெம்டெசிவிர், டோஸிலிஜுமாப், மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் ஆகியவற்றுக்கு வரி குறைக்கப்படலாம்.
இதற்கிடையே அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் காரணம்காட்டி, ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு கடந்த ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
ஆதலால் வெள்ளிக்கிழமை நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து பேசப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பெட்ரோல், டீசல் சில்லரை விலையில் பாதிக்கு மேல் வாட் வரியும், உற்பத்தி வரியும்தான் இருக்கிறது. மத்திய அரசு பெட்ரோலுக்கு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.32.80 பைசாவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.31.80 பைசாவும் வசூலிக்கிறது,இந்த வரியை மத்திய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளாது. ஆனால், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்பட்டால், வரியை 50:50 சரிபாதியாக மத்திய, மாநில அரசுகள் பிரிக்க வேண்டியது இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT