Published : 14 Sep 2021 10:17 AM
Last Updated : 14 Sep 2021 10:17 AM
இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் சண்டிகரில் நடத்தப்பட்ட ஆய்வில் 71 சதவிகித குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய கரோனா இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அன்றாட பாதிப்பு 4.5 லட்சத்தையும் கடந்து சென்றது. தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகம் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருவதாக நிபுணர் குழுவும் கூறியுள்ளது. அதேவேளையில், குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டுகளை தயார்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய செரோ ஆய்வில் 71 சதவிகித குழந்தைகளின் மாதிரிகளில் ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சண்டிகர் பிஜிஐஎம்இஆர் இயக்குனர் டாக்டர் ஜெகத் ராம் கூறியதாவது:
நாம் கோவிட் -19 தொற்றுநோயின் 3 வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். குழந்தைகளுக்கு இன்னமும் தடுப்பூசிகள் போடப்படவில்லை. எனவே கோவிட் -19 காரணமாக பாதிப்பு இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு அதிகஅளவில் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளன.
பிஜிஐஎம்இஆர் சார்பில் சண்டிகரில் 2700 குழந்தைகளிடையே செரோ சர்வே நடத்தப்பட்டது. சண்டிகர், கிராமப்புற, நகர்ப்புறங்கள் மற்றும் குடிசைப்பகுதி மக்களிடமிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
அவர்களில் 71 சதவிகிதம் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. சுமார் 69 சதவிகிதம் முதல் 73 சதவிகிதம் குழந்தைகள் நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது. சராசரியாக 71 சதவிகிதம் மாதிரிகள் ஆன்டிபாடி உருவாக்கியுள்ளது தெரிய வருகிறது.
எனவே மூன்றாவது அலை ஏற்பட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்ற அச்சம் தேவையில்லை. இருப்பினும் பாதிப்பு பற்றிய அலட்சியம் தேவையில்லை. தொற்று. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் சுமார் 50-75 சதவிகித குழந்தைகள் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. எனவே, மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்காது என்பதை பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆன்டிபாடிகள் உருவாவதால் கரோனா தொற்று ஏற்பட்டால் பாதிப்பின் அளவும் மிகவும் குறைவாகவே இருக்கும். அதேசமயம் பொதுமக்கள் கோவிட் விஷயத்தில் பொருத்தமான நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT