Last Updated : 12 Sep, 2021 02:35 PM

1  

Published : 12 Sep 2021 02:35 PM
Last Updated : 12 Sep 2021 02:35 PM

உ.பி. கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா போட்டியிடும்: சஞ்சய் ராவத் பேட்டி

சிவசேனா கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் | படம் ஏஎன்ஐ

மும்பை

உத்தரப்பிரதேசம், கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடும், விவசாயிகள் அமைப்புகள் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் என அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் உ.பியில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக தீவிரமாக பல்வேறு தலைவர்களை களமிறங்கி பணியைத் தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 2 ஆண்டுகளாக உ.பி.யில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். இது தவிர சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ் என 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே உ.பி தேர்தலில் சிவசேனா கட்சியும் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளது.

மும்பையில் சிவேசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ உ.பி., கோவா மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிட உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 80 முதல் 100 இடங்களில் போட்டியிடும். கோவாவில் 20 இடங்கள் வரை போட்டியிடுவோம்.

உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதி விவசாயிகள் சிவசேனா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆதலால், உ.பி தேர்தலில் சிவசேனா கட்சி சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிடும். கோவா மாநிலத்தில் மகாராஷ்டிராவில் மகாவிகாஸ் அகாதி கூட்டணி போல், கோவாவில் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சி தேர்தலைச் சந்திக்கும்.

இந்த இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெறுகிறோமோ அல்லது தோல்வி அடைகிறோமோ ஆனால், தேர்தலில் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்தார்

குஜராத்தில் விஜய் ரூபானி முதல்வர் பதவியிலிருந்து விலகியது குறித்து நிருபர்கள் கேட்டபோது அதற்கு சஞ்சய் ராவத் பதில் அளிக்கையில் “ இது பாஜகவின் உட்கட்சி விவகாரம் இதில் வெளியாட்கள் தலையிடக்கூடாது, இதில் நான் கருத்துக் கூற முடியாது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததில் இருந்து விஜய் ரூபானி எனக்கு நண்பர். கடந்த முறை பாஜக பெரும்பான்மைக்கு சற்று அதிகமாகத்தான் வென்றது. ஆனால், இந்த முறை சூழல் கட்சிக்கு சாதகமாக இல்லை” எனத் தெரிவித்தார்

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நீண்ட காலக் கூட்டணியான பாஜகவுடன் கருத்து மோதல் ஏற்பட்டு சிவசேனா பிரிந்தது. அதன்பின் என்சிபி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி அமைத்துள்ளது.

இதற்கிடையே உத்தரப்பிரதேச சிவசேனா மாநில செயற்குழுக் கூட்டம் லக்னோவில் நேற்று நடந்தது. இதில் உ.பியில் உள்ள 403 தொகுதிகளிலும் சிவசேனா கட்சி போட்டியிட வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உ.பி.யில் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா , உ.பியி்ல் உள்ள 27,700 தேர்தல் பூத்களிலும் தேர்தல் பணியை நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மாநில நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்களாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் காங்கிரஸ் கட்சி சார்பில் 12 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு பிரத்திக்யா யாத்திரை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மண்டலவாரியாக பிரச்சாரமும், நிகழ்ச்சிகளும் நடத்தவும் பிரியங்கா காந்தி திட்டமிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x