Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM
தெலங்கானாவில் போக்கு வரத்து கூட இல்லாத மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ட்ரோன் மூலம் கரோனா தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது.
தெலங்கானா விகாராபாத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா 3 ட்ரோன்களை இயக்கி இத்திட்டத்தின் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவ் பேசும்போது, “நாட்டிலேயேமுதன்முறையாக தெலங்கானாவில் ட்ரோன் உதவியுடன் மருந்துவிநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. ‘மெடிசன் ஃப்ரம் ஸ்கை’ (வான் வழியாக மருந்து) என இதற்கு பெயரிட்டுள்ளோம்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நவீன தொழில்நுட்பத்தை உன்னிப்பாக கவனிப்பார். மனித இனத்துக்கு பயன்படாத நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் தேவையற்றது எனகூறுவார். ஆனால், போக்குவரத்துகூட அற்ற நிலையில் உள்ள குக்கிராமங்களுக்கும் ட்ரோன்கள் மூலம் இனி மருந்துகள், ரத்தம் போன்றவை போய் சேரும். இதனை பல்வேறு துறைகளுக்கும் உபயோகப்படுத்தலாம். பெண்கள் பாதுகாப்புக்கும், சுரங்கத் துறைக்கும் இது பெரிதும் உபயோகமாக இருக்கும்” என்றார்.
இந்த ட்ரோன் திட்டத்தில், நிதி ஆயோக், உலக பொருளாதார அமைப்பு, ஹெல்த் நெட் க்ளோபல் அமைப்புகள் பங்கேற்றுள்ளன. ஒரு ட்ரோன் மூலம் 40 கிலோ எடையுள்ள மருந்துகளை ஒரே சமயத்தில் 15 கி.மீ தூரம் வரை கொண்டு சென்று சேர்க்கமுடியும்.
முதலில் இதனை கரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்ல 8 அமைப்புகள் முன் வந்துள்ளன. அதன்பின் இவற்றை விவசாயம், பாதுகாப்பு, போக்குவரத்து, தீயணைப்புப்படை, விபத்து நடந்த இடம், மின்சார கம்பங்கள், செல்போன் டவர்கள், சுரங்கம், வன விலங்குகளின் பராமரிப்பு, நில சர்வே போன்ற பல பணிகளுக்கு உபயோகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT