Published : 12 Feb 2016 05:47 PM
Last Updated : 12 Feb 2016 05:47 PM

ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரியதா? - உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி

சபரிமலை கோயிலுக்குள் அனைத்துப் பெண்களும் நுழைவதற்கு மீதுள்ள தடையை எதிர்க்கும் வழக்கில் 'ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா?' என்று கேரள அரசு மற்றும் சபரிமலை தேவஸ்வம் வாரியம் நோக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி எழுப்பியது.

சபரிமலையில் அனைத்துப் பெண்களுக்கும் அனுமதி அளிப்பதன் மீதான தடை விவகார வழக்கு விசாரணை இன்று மீண்டும் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை அமர்வின் முன் வந்தபோது, வேதங்கள், வேதசாரமாகிய உபநிடதங்கள், மற்றும் புனித நூல்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகுபாடு கற்பிக்காத நிலையில் எங்கிருந்து வருகிறது இந்தப் பாகுபாடு என்று கேள்வி எழுப்பிய போது கேரள அரசு மற்றும் தேவஸ்தான பிரதிநிதிகள் வாயடைத்து நின்றனர்.

"ஆன்மிகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா?

உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா?” என்று நீதிபதி தீபக் மிஸ்ரா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதாவது சபரிமலைக் கோயிலுக்குள் நுழைய மாலையிட்டுக் கொண்டு, கடும் விரதங்களையும் கடினபாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்ற வாதத்துக்கு கேள்வி எழுப்பிய தீபக் மிஸ்ரா இவ்வாறு கூறி அதிர வைத்தார்.

சட்ட மாணவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடும் போது, “பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளனர்” என்றார். அவர் மேலும் கூறும்போது, “அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 என்ன கூறுகிறது என்றால், அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது. நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூற வருகிறீர்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.

வழிபாட்டு பண்பாட்டுக்கும் மதத்திற்கும் வேறுபாடு கூறிய நீதிபதி தீபக் மிஸ்ரா, “வழிபாட்டு பண்பாட்டில் ஒரு மையமான குழு இருக்கும். இதில் பிறரை வெளியாட்கள் என்று தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும். ஆனால் மதம் என்பது முழுமைத்துவத்தை வலியுறுத்துவது, அதுதான் சனாதன தர்மம், பால், சாதி, இன வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கியதே சனாதன தர்மம்” என்றார்.

மாநில அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் வி.கிரி கூறும்போது, சபரிமலைக்கு ஒரு வீட்டில் ஒரு ஆண் மாலையிட்டுக் கொள்கிறார் என்றால், பெண்கள், குழந்தைகள் உட்பட அவரை அவரது குடும்பமே ஆதரிக்கிறது, என்றும் “நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை பக்தர்கள் மனதில் உட்பொதிந்துள்ளது” என்றார்.

“கடவுள் ஒரு துறவி, அவரை வழிபடச்செல்லும் பக்தர்கள் ‘சுவாமி’ என்று அழைக்கப்படுகின்றனர்.” என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி மிஸ்ரா, “அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா? வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள்” என்று வலியுறுத்தினார்.

மேலும், தடைக்கு ஆதரவான ஆயிரமாண்டு கால நிரூபணத்தை 6 வாரங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வேணுகோபாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கிற்கு சட்ட, அரசியல் சாசன மற்றும் ஆன்மீக தளங்களில் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது என்பதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் என்பவரை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக நியமித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x