Published : 11 Sep 2021 03:54 PM
Last Updated : 11 Sep 2021 03:54 PM
கரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக்கொண்டவர்கள், கரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பிலிருந்து 97 சதவீதம் தடுக்க முடியும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் அளவு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, கரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வருகிறது. 3-வது அலை வருவதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. செப்டம்பர் முதல் பண்டிகைக் காலம் தொடங்குவதால், பண்டிகைகள், விழாக்கள், விசேஷங்களில் மக்கள் கூட்டமாகப் பங்கேற்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''அடுத்துவரும் காலம் பண்டிகைக் காலம். மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் தவிர்க்க வேண்டும், கொண்டாட்டத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பயணங்களையும் தவிர்க்க வேண்டும்.
ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தால், அடுத்த 3 மாதங்களுக்குப் பின் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் போதுமானது. கரோனா தடுப்பூசி என்பது நோய்த் தடுப்பூசி அல்ல. தடுப்பூசி செலுத்திய பின்புகூட ஒருவர் கரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும். ஆனால், தடுப்பூசி செலுத்தியிருந்தால், நோயின் தீவிரத் தன்மை குறைந்திருக்கும்.
பல்வேறு தரப்பிலிருந்து கிடைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, ஒரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டாலும் அவர்கள் 96.6% நோய்த்தொற்று உயிரிழப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால், 97.5 சதவீதம் நோய்த்தொற்று உயிரிழப்பிலிருந்து காக்க முடியும். ஆதலால், ஒவ்வொருவரும் தடுப்பூசி செலுத்துங்கள் என ஊக்கப்படுத்துகிறோம்''.
இவ்வாறு பார்கவா தெரிவித்தார்.
நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் கூறுகையில், “ இதுவரை இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 58 சதவீதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 100 சதவீதத்தை எட்டுவோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், பள்ளிகளைத் திறப்பதற்காகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT