Published : 11 Sep 2021 12:12 PM
Last Updated : 11 Sep 2021 12:12 PM

பல்கலை. பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரலாறு: கேரளாவில் சர்ச்சை 

கேரள மாநிலம், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படிப்பு தலசேரியில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கேரள மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் பிரிவு, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவு ஆகியோர் பாடத்திட்டத் தாள்களை நகலெடுத்து, அவற்றை எரித்துத் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர். எனினும் இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் காவிமயமாக்கல் குற்றச்சாட்டுக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் கூறும்போது, ''அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும்போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும். எனினும் இதுகுறித்து வெளியான தகவலின்படி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

எனினும் மாநில அரசு இதுகுறித்துப் பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. அதேபோலப் பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய, கேரளப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சார்பு துணைவேந்தரான பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசவிரோதக் கருத்துகளைத் தெரிவித்தல், மாணவர்கள் மத்தியில் போதித்தல் போன்றவை கூடாது என்று அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் காசர்கோட்டில் உள்ள கேரள மத்தியப் பல்கலைக்கழகம் அண்மையில் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x