Published : 10 Sep 2021 04:36 PM
Last Updated : 10 Sep 2021 04:36 PM
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக சென்னை, புதுச்சேரி 19 இடங்களில் போர்விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-925ஏ பகுதியில் அவசரகால தரையிறங்கும் வசதியை தொடங்கி வைத்துப் பேசிய அவர், முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என்று தெரிவித்தார்.
சென்னை, புதுச்சேரி சாலை மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் 19 இடங்களில் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று கட்கரி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணி அதிவிரைவாக மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இனி நமது தேசிய நெடுஞ்சாலைகளை ராணுவத்தினரும் பயன்படுத்துவார்கள் என்பதால் நம் நாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவசரகால நிலைகளுக்கு எப்போதும் தயாராகவே இருக்கும்.
மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், பாதுகாப்பு படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், விமானப்படை தலைவர் ஆர் எஸ் பதௌரியா ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT