Published : 08 Sep 2021 04:40 PM
Last Updated : 08 Sep 2021 04:40 PM
கேரளாவில் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு தவறான வாட்ஸ்அப் செய்தி அனுப்பியதையடுத்து, ஐஏஎஸ்அதிகாரி என். பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள கப்பல் மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநராக இருப்பவர் ஐஏஎஸ்அதிகாரி என். பிரசாந்த். இவர் மீது கொச்சி பாலர்வட்டம் காவல்நிலையத்தில் ஐபிசி பிரிவு 509ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள உழைக்கும் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் அனுப்பப்பட்டது. அவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன் கேரள சட்டப்பேரவைக் கூட்டம் நடந்தது. அப்போது,கேரள கப்பல்மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்துக் கழகத்துக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கும் இடையே மீன்பிடி உரிமை, படகுவிடுதல் தொடர்பாக எழுந்த ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது கேரள கப்பல் மற்றும் உள்நாட்டுப் போக்குவரத்துக் கழகத்தின் இயக்குநராக ஐஏஎஸ்அதிகாரி பிரசாந்த் இருந்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக கேரள நாளேட்டின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் பிரசாந்த்துக்கு வாட்ஸ்அப்பில் கேள்வி அனுப்பி பதில் பெற முயன்றார்.
அதற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் பதிலாக அந்த பெண் பத்திரிகையாளருக்கு சர்ச்சைக்குரிய இரு ஸ்டிக்கர்களை அனுப்பினார். இந்த இரு ஸ்டிக்கர்களும் அந்த பெண் பத்திரிகையாளரை அவதூறு செய்யும் விதத்தில் இருந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் தனது முகநூல் வழியாக பதிவிட்டு, ஐஏஎஸ் அதிகாரி தன்னுடைய கேள்விக்கு பதிலாக அனுப்பிய ஸ்டிக்கர்களையும் பதிவிட்டார்.
இதையடுத்து, கேரள உழைக்கும் பெண் பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் பினராயி விஜயனுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி, ஐஏஎஸ்அதிகாரி பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த விவகாரத்தில் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை போலீஸார் எடுக்கலாம் என முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார்.இதையடுத்து ஐபிசி பிரிவு 509ன்கீழ் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வரக் கோரி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT